பரேலில் கொடூர சம்பவம்- 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்
பிறந்தநாள் விருந்துக்கு அழைத்து சென்று சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த ஆண் நண்பர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.;
மும்பை,
பிறந்தநாள் விருந்துக்கு அழைத்து சென்று சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த ஆண் நண்பர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமி கூட்டுபலாத்காரம்
மும்பையை சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு பிறந்தநாள் விருந்துக்கு பரேல் பகுதியில் உள்ள குடிசை வீட்டுக்கு அழைத்து சென்றார். வீட்டில் ஆண் நண்பரின், நண்பர்கள் 5 பேரும் இருந்தனர்.
அங்கு சிறுமியை கட்டாயப்படுத்தி அவரது ஆண் நண்பர் கற்பழித்தார். அவரை தொடா்ந்து மற்ற 5 பேரும் சிறுமியை மிரட்டி கற்பழித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையின் சிறுமியின் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற போலீசார் வீட்டில் இருந்து சிறுமியை மீட்டனர். மேலும் அவருடன் இருந்த 6 பேரை பிடித்தனர்.
3 சிறார்கள்
விசாரணையில் சிறுமியை ஆண் நண்பர் உள்பட 6 பேர் மிரட்டி கற்பழித்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் 6 வாலிபர்களையும் கைது செய்தனர். அவர்களில் 3 பேர் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பதால் அவர்களை டோங்கிரியில் உள்ள காப்பகத்தில் அடைத்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை அருகே வசாய் பகுதியில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த ஆண் நண்பர் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்தநிலையில் மும்பையில் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர சம்பவம் பொது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.