மாற்றுத்திறனாளி மணப்பெண்ணிற்கு உதவ மறுத்த திருமண பதிவு அதிகாரி பணி இடைநீக்கம்

மாற்றுத்திறனாளி மணப்பெண்ணிற்கு உதவ மறுத்த திருமண பதிவு அதிகாரியை பணி இடைநீக்கம் செய்து வருவாய்த்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2023-10-26 19:00 GMT

மும்பை, 

மாற்றுத்திறனாளி மணப்பெண்ணிற்கு உதவ மறுத்த திருமண பதிவு அதிகாரியை பணி இடைநீக்கம் செய்து வருவாய்த்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மாற்றுத்திறனாளி பெண்

மும்பையை சேர்ந்த பெண் விராலி மோடி. மாற்றுத்திறனாளியான இவருக்கு கடந்த வாரம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கார்ரோடு பகுதியில் உள்ள திருமண பதிவு அலுவலகத்திற்கு வருங்கால கணவர் மற்றும் குடும்பத்தினருடன் சென்றார். அங்கு 2-வது மாடியில் பதிவு அலுவலகம் இருந்ததால் அவரால் மேலே செல்ல முடியவில்லை. சக்கரநாற்காலியில் வந்த மணமகள் விராலி மோடி அதிகாரியை கீழே வரும்படி கேட்டுக்கொண்டார். இதற்கு அதிகாரிகள் மறுத்ததால் விராலி மோடியை மணமகன் தூக்கி கொண்டு மாடிக்கு சென்றார். அங்கு திருமண பதிவு நடந்து முடிந்த நிலையில் புதுமணப்பெண் தனது நிலைமை குறித்து எக்ஸ் பதிவில் குறிப்பிட்டு இருந்தார். தன்னை மாற்றுத்திறனாளி உரிமை ஆர்வலர் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர், திருமண பதிவாளரின் அலுவலகத்தில் லிப்ட் வசதி கிடையாது. நாங்கள் கேட்டுக்கொண்டும் திருமண பதிவை முடிக்க அதிகாரிகள் கிழே வர மறுத்து விட்டனர். இது எப்படி நியாயம்?. சக்கரநாற்காலியில் இருப்பவள் என்பதால் நான் விரும்பும் ஒருவரை திருமணம் செய்து கொள்ள எனக்கு உரிமை இல்லையா?. மேலே நான் தூக்கி செல்லப்பட்டபோது வழுக்கி விழுந்திருந்தால் என்ன செய்வது? திருமண நாளில் இப்படியொரு சம்பவம் நடந்திருந்தால், அதற்கு யார் பொறுப்பு? என கேள்வி மேல் கேள்வி கேட்டு இருந்தார்.

பணி இடைநீக்கம்

இது பற்றி அறிந்த துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் புதுப்பெண் விராலி மோடிக்கு ஆறுதல் தெரிவித்தார். இதற்காக வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு அதிகாரிகளுக்கு பட்னாவிஸ் உத்தரவிட்டார். விசாரணையில் அன்றைய தினம் பதிவு அதிகாரியாக அருண் கோடேகர் இருந்ததாகவும், அவர் தான் மணப்பெண்ணிற்கு உதவ மறுத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரி அருண் கோடேகரை மாநில வருவாய்துறை பணி இடைநீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்