பால்கர் அருகே தொழிற்சாலையில் ஹைட்ரஜன் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 தொழிலாளர்கள் பலி- 8 பேர் படுகாயம்
பால்கர் அருகே தொழிற்சாலையில் ஹைட்ரஜன் கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 8 பேர் காயம் அடைந்தனர்.;
வசாய்,
பால்கர் அருகே தொழிற்சாலையில் ஹைட்ரஜன் கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 8 பேர் காயம் அடைந்தனர்.
பயங்கர தீ
பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு ஜூசந்திரா சந்திரபாடா பகுதியில் எலெக்ட்ரிக்கல் உபகரணங்கள் தயாரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று பிற்பகலில் திடீரென அங்குள்ள ஹைட்ரஜன் சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.
3 பேர் பலி
இதில் அங்கு வேலை பார்த்து கொண்டு இருந்த 11 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 3 பேர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் கருகி இருந்தனர்.
மேலும் படுகாயமடைந்த 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.