கன்டெய்னர் லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.;

Update:2022-06-05 21:10 IST

மும்பை, 

கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.

அண்ணன் குடும்பத்தினர்

புனே வக்காட் பகுதியை சேர்ந்தவர் அரின்ஜெய்(வயது35). இவா் கப்பலில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் விடுமுறையையொட்டி அரின்ஜெயின் வீட்டுக்கு அவரது அண்ணன் மனைவி ஸ்மிதா(38) மற்றும் அவரது மகன்கள் பூர்வா(14), சுனிஷா(9), வீரு (4) ஆகியோர் வந்து இருந்தனர்.

இதில் அரின்ஜெய் அண்ணன் மனைவி மற்றும் பிள்ளைகளை கோலாப்பூர், ஜெய்சிங்பூரில் உள்ள வீட்டில் விட காரில் அழைத்து சென்றார். அவர்கள் காலையில் வக்காடில் இருந்து புறப்பட்டனர். காரட் பகுதியில் மதிய உணவு சாப்பிட்டு உள்ளனர்.

5 பேர் பலி

பகல் 2.30 மணியளவில் அவர்கள் கார் புனே- பெங்களூரு நெடுஞ்சாலையில் சாங்கிலி, காசேகாவ் கிராமம் அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னர் லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இதில், இடிபாடுகளில் சிக்கி காரில் இருந்த அரின்ஜெயின், ஸ்மிதா, அவரது மகன்கள் 3 பேரும் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் 5 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது 5 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது.

விபத்து குறித்து சாங்கிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கார் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். முன்னதாக இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியான சம்பவம் புனே வக்காட் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்