மும்பையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நீண்டகால திட்டம்- ஏக்நாத் ஷிண்டே உத்தரவு
மும்பையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நீண்டகால திட்டங்களை வகுக்குமாறு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.;
மும்பை,
மும்பையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நீண்டகால திட்டங்களை வகுக்குமாறு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீண்டகால திட்டம்
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மும்பையில் நிலவும் போக்குவரத்து பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம், மாநில சாலை மேம்பாட்டு கழகம், மும்பை பெருநகர் பகுதியில் உள்ள மாநகராட்சி, மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் மும்பை, தானே, பால்கர், நவிமும்பை பகுதிகளை உள்ளிடக்கிய மும்பை பெருநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்க நீண்ட கால திட்டங்களை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
குறிப்பாக இந்த பிரச்சினையை தீர்க்க மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் முன்நின்று பணியாற்ற வேண்டும் என்றார். போக்குவரத்து நெரிசலை குறைக்க மும்பை பெருநகரப்பகுதியில் உள்ள மாநகராட்சி நிர்வாகங்கள், மாநில சாலை போக்குவரத்து கழகம் மற்றும் மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் மேம்பாலங்கள், பறக்கும் சாலைகள், சர்வீஸ் சாலை, சுரங்கப்பாதை ஆகியவற்றை கட்ட வேண்டும் என கூறிய முதல்-மந்திரி இந்த பணிகளுக்கான நிலத்தை கையகப்படுத்த மும்பை பெருநகரில் உள்ள மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
சிறப்பு அதிகாரி நியமனம்
இதேபோல நெடுஞ்சாலைகள் குறிப்பாக ஜவகர்லால் நேரு துறைமுகம், ஆமதாபாத் செல்லும் சாலைகளில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டார்.
இதேபோல குண்டும் குழியுமான சாலை பிரச்சினையை தீர்க்க மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம், மாநில சாலை மேம்பாட்டு கழகம் கண்டிப்பாக சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.