மாஜிஸ்திரேட்டு மீது செருப்பு வீசிய கைதி- குர்லா கோர்ட்டில் பரபரப்பு
குர்லா கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு மீது செருப்பு வீசிய கைதியால் பரபரப்பு ஏற்பட்டது.;
மும்பை,
குர்லா கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு மீது செருப்பு வீசிய கைதியால் பரபரப்பு ஏற்பட்டது.
செருப்பு வீசிய கைதி
மும்பை மான்கூர்டு பகுதியை சேர்ந்தவர் ஜாவித் சேக் என்ற பிரதீப் தாயடே(வயது39). இவர் மீது என்.எம். ஜோஷி, டிராம்பே போலீசில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக கடந்த சனிக்கிழமை ஜாவித் சேக், குர்லா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு வந்தார். அவர் சுமார் 1 மணி நேரம் காத்திருந்த போதும், வழக்கு விசாரணை தொடங்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர் எழுந்து சத்தம் போட்டார். திடீரென அவர் காலில் அணிந்து இருந்த செருப்பை கழற்றி மாஜிஸ்திரேட்டு மீது வீசி எறிந்தார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தாமதத்தால் ஆத்திரம்
உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஜாவித் சேக்கை கைது செய்தனர். பின்னர் அவர் குர்லா போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டார். அவர் மீது போலீசார் அரசு ஊழியரை தாக்குதல், பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இதுதொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஜாவித் சேக் அவர் மீதான வழக்கு விசாரணையை விரைவில் தொடங்கி முடிக்குமாறு அவரது வக்கீல், கோர்ட்டில் கேட்டு கொண்டு இருக்கிறார். கோர்ட்டுக்கு மீண்டும், மீண்டும் வந்தும் விசாரணை நடக்காததால் அவர் அதிருப்தியில் இருந்து உள்ளார். சம்பவத்தன்று அவர் பொறுமையை இழந்து நீதிபதி மீது செருப்பை வீசியிருக்கிறார்," என்றார்.