மராத்தா சமூகத்தினருக்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்கான சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை - ஏக்நாத் ஷிண்டே தகவல்

மராத்தா சமூகத்தினருக்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்கான சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

Update: 2023-09-04 19:45 GMT

மும்பை, 

மராத்தா சமூகத்தினருக்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்கான சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

'குன்பி' சாதி சான்றிதழ்

மராட்டியத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் துணை முதல்-மந்திரிகள் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித்பவார் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக்கு பிறகு அவர், மரத்வாடாவில் வசிக்கும் மராத்தா சமூகத்தினருக்கு 'குன்பி' சாதி சான்றிதழ் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.

கமிட்டி அமைப்பு

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- மரத்வாடாவில் வாழும் மராத்தா சமூக மக்களுக்கு 'குன்பி' சாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மாநில அரசு இந்த விவகாரத்தை தீவிரமாக கையாண்டு வருகிறது. சுமூகமாக தீர்வு கிடைக்க நாங்கள் வேலை செய்து வருகிறோம். இதேபோல மராத்தா ஒதுக்கீடு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். மராத்தா சமூகத்தினர் பின்தங்கியவர்கள் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அரசாணை வெளியிட வேண்டும்

மராட்டியத்தில் வேளாண் தொழிலில் ஈடுபட்டு இதர பிற்படுத்தப்பட்டவர்கள் (ஒ.பி.சி.) பட்டியலில் வரும் மக்கள் 'குன்பி' பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர். அந்த சாதி சான்றிதழை தான் மராத்தாக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். இதற்கிடையே மராத்தா இடஒதுக்கீடு கேட்டு ஜல்னாவில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் மனோஜ் ஜாரங்கே, மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அரசு அரசாணை வெளியிட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவேன் என அறிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்