'இந்தியா' கூட்டணி கூட்டம் குறித்து ஆலோசனை; சரத்பவார், உத்தவ் தாக்கரே பங்கேற்பு

‘இந்தியா’ கூட்டணி குறித்த ஆய்வு கூட்டத்தில் நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்து கொண்டனர்.;

Update:2023-08-24 01:15 IST

மும்பை, 

'இந்தியா' கூட்டணி குறித்த ஆய்வு கூட்டத்தில் நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்து கொண்டனர்.

மும்பையில் கூட்டம்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு 'இந்தியா' கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் கடந்த மாதம் பெங்களூருவிலும் நடந்தது. இந்த நிலையில் 3-வது கூட்டம் வருகிற 31 மற்றும் செப்டம்பர் 1-ந் தேதிகளில் மும்பையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை சேர்ந்த பல முதல்-மந்திரிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். 'இந்தியா' கூட்டணி கூட்டத்திற்காக திட்டமிடப்பட்ட நாள் நெருங்கி வரும் நிலையில் மராட்டியத்தை சேர்ந்த கூட்டணி தலைவர்கள் நேற்று ஆலோசித்தனர்.

தொகுதி பங்கீடு

இந்த கூட்டத்தில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பின்போது எதிர்க்கட்சி கூட்டணியின் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து முழுமையான ஆலோசனை நடைபெற்றது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிகழ்ச்சி ஏற்பாடு குழுவின் தலைவரான காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவான் கூறியதாவது:- 'இந்தியா' கூட்டணி கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் தேசிய தலைவர்களால் இறுதி செய்யப்படும். மும்பையில் நடக்க இருக்கும் 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் கூட்டத்தின் நோக்கம், தொகுதி பங்கீடு குறித்து பேசுவது இல்லை. மாறாக பா.ஜனதாவை வெற்றிபெற வியூகங்கள் வகுக்கப்படும். தொகுதி பங்கீடு போன்ற அனைத்து பிரச்சினைகளும் சரியான நேரம் வரும்போது ஆலோசித்து சுமூகமான முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

லோகோ வெளியீடு

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மிலிந்த் தியோரா, வர்ஷா கெய்க்வாட், உத்தவ் பாலசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர்கள் சஞ்சய் ராவத், ஆதித்ய தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே ஆகியோரும் கலந்துகொண்டனர். மும்பையில் நடைபெறும் 'இந்தியா' கூட்டணி கட்சியின் கூட்டத்தில் கூட்டணிக்கான லோகோ வெளியிடப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்