புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மும்பை நட்சத்திர ஓட்டலில்சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் கைது

மும்பை நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்ட நடனத்தின் போது, 12 வயது சிறுமியிடம் வாலிபர் ஒருவர் அத்துமீறினார். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.;

Update:2023-01-03 00:15 IST

மும்பை, 

மும்பை நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்ட நடனத்தின் போது, 12 வயது சிறுமியிடம் வாலிபர் ஒருவர் அத்துமீறினார். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நட்சத்திர ஓட்டலில் நடனம்

மும்பையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் இன்றி புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. கடற்கரைகள் உள்ளிட்ட பொதுவெளிகளில் ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் குதூகலமாக புத்தாண்டை வரவேற்றனர்.

இதேபோல நட்சத்திர ஓட்டல்களில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. அதன்படி மும்பை ஜூகு பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் 12 வயது சிறுமி பெற்றோருடன் கலந்து கொண்டார். சிறுமி நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் ஓட்டலின் நடனப்பகுதியில் நடனமாடி கொண்டு இருந்தார். அப்போது 29 வயது வாலிபர் ஒருவரும் நடனமாடினார்.

அத்துமீறிய வாலிபர்

நடனத்தின்போது அந்த வாலிபர் சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். தொடக்கூடாத இடங்களில் தொட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். வாலிபரின் செயலால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறினார். உடனடியாக சிறுமியின் பெற்றோர் ஓட்டல் ஊழியர்களை உஷார்படுத்தினர்.

இதை அறிந்த வாலிபர் தப்பிக்க முயன்றார். ஆனால் ஓட்டல் ஊழியர்கள் அவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வாலிபரை கைது செய்து அவர் மீது மானபங்கம் மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிறுமியிடம் வாலிபர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்