வங்கி கடன் மோசடி வழக்கு: சந்தா கோச்சாரின் கணவரை மிரட்டிய வீடியோகான் அதிபர் - குற்றப்பத்திரிக்கையில் பரபரப்பு தகவல்
‘‘சந்தா கோச்சார் ஒருநாள் இந்திராணியுடன் ஜெயிலில் ஒரே அறையில் இருப்பார்'' என வாக்குவாதத்தின் போது அவரின் கணவர் தீபக் கோச்சாரிடம், வேணு கோபால் தூத் கூறிய பரபரப்பு தகவல் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்று உள்ளது.;
மும்பை,
''சந்தா கோச்சார் ஒருநாள் இந்திராணியுடன் ஜெயிலில் ஒரே அறையில் இருப்பார்'' என வாக்குவாதத்தின் போது அவரின் கணவர் தீபக் கோச்சாரிடம், வேணு கோபால் தூத் கூறிய பரபரப்பு தகவல் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்று உள்ளது.
வங்கி கடன் முறைகேடு வழக்கு
பிரபல தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ-யின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சந்தா கோச்சார். உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலிலும் இடம்பெற்றவர். இவர் பதவியில் இருந்தபோது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3 ஆயிரத்து 250 கோடி கடனை முறைகேடாக வழங்கி மோசடியில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. 2019-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 23-ந் தேதி சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சாரை சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்தது. அதன் பிறகு வீடியோகான் அதிபர் வேணுகோபால் தூத்தும் கைது செய்யப்பட்டார். தற்போது 3 பேரும் ஜாமீனில் வெளியே உள்ளனர்.
இந்திராணியுடன் ஜெயிலில் இருப்பார்
இந்தநிலையில் வழக்கு தொடர்பாக 10 ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளது. குற்றப்பத்திரிகையில் 3 பேரும் மோசடியில் ஈடுபட்டது தொடர்பான விரிவான தகவல்கள் இடம்பெற்று உள்ளன. இதில் ஒருமுறை வாக்குவாதத்தின்போது வேணுகோபால் தூத், "மகளை கொன்று ஜெயிலில் உள்ள இந்திராணி முகர்ஜியுடன், சந்தா கோச்சரும் அறையை பகிர வேண்டிய நிலை ஏற்படும்" என அவரது கணவர் தீபக் கோச்சாரிடம் மிரட்டியதாக கூறப்பட்டுள்ளது. சாட்சியங்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, சர்ச்கேட் சி.சி.ஐ. சேம்பரில் உள்ள வீடு தொடர்பாக வேணுகோபால் தூத், தீபக் கோச்சார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிக்கையில் தகவல்
வேணுகோபால் தூத் குறிப்பிட்ட வீட்டுக்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் வீட்டுகடன் நிறுவனத்துக்கு ரூ.5.38 கோடி கொடுத்ததாகவும், எனவே அந்த வீடு தனக்கு சொந்தமானது என தீபக் கோச்சாரிடம் கூறியுள்ளார். அப்போது தீபக் கோச்சார் வீட்டை அவர்களின் குடும்ப அறக்கட்டளைக்கு மாற்றாவிட்டால், சந்தா கோச்சார், வேணு கோபால் தூத்தின் வங்கி கணக்குகளை செயல்படாத சொத்துக்கள் (என்.பி.ஏ.) என அறிவித்துவிடுவார் என மிரட்டி உள்ளார். இதையடுத்து வேணு கோபால் தூத், 'அதுபோல வீட்டை உங்களின் பெயருக்கு மாற்ற வேண்டாம், அப்படி செய்தால் சந்தா கோச்சாருக்கு பிரச்சினை ஏற்பட்டு அவர் ஒருநாள் இந்திராணி முகர்ஜியுடன் ஜெயில் அறையை பகிர்ந்து கொள்ள வேண்டியது வரும்' என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீபக் கோச்சார், எனது அறிவுரையை ஒழுங்காக கேள், அல்லது உன்னை அழித்துவிடுவேன் என வேணுகோபால் தூத்தை மிரட்டி உள்ளார். இந்த தகவல்கள் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்று உள்ளது.