மும்பையில் பெஸ்ட் மின் கட்டணம் உயருகிறது

மும்பையில் மின் கட்டணத்தை உயர்த்த பெஸ்ட் திட்டமிட்டு உள்ளது.

Update: 2023-01-24 18:45 GMT

மும்பை, 

மும்பையில் மின் கட்டணத்தை உயர்த்த பெஸ்ட் திட்டமிட்டு உள்ளது.

உயர்த்த முடிவு

மும்பையில் மாநகராட்சி பெஸ்ட் நிறுவனம் பெரும்பாலான இடங்களில் மின் வினியோகத்தில் ஈடுபட்டு வருகிறது. மும்பையில் பெஸ்ட் தவிர ரிலையன்ஸ், டாடா, அதானி போன்ற தனியார் நிறுவனங்களும் மின் வினியோகத்தில் ஈடுபட்டு வருகின்றன. தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் பெஸ்ட் மின் கட்டணம் குறைவாக இருக்கும்.

இந்தநிலையில் மின் கட்டணத்தை அதிகரிக்க பெஸ்ட் நிறுவனம் முடிவு செய்து உள்ளது. மின் கட்டணத்தை அதிகரிக்க பெஸ்ட் நிர்வாகம் மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் அனுமதி கேட்டு உள்ளது.

18 சதவீதம் அதிகரிக்கிறது

தற்போது வீடுகளுக்கு 100 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.3.53 கட்டணமாக உள்ளது. இதை ரூ.4.16 (18 சதவீதம்) ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

100 முதல் 300 யூனிட் வரை கட்டணம் ரூ.6.66 ஆக உள்ளது. இதை ரூ.7.03 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளுக்கு யூனிட் கட்டணம் ரூ.6.88-ல் இருந்து ரூ.6.96 ஆக அதிகரிக்கிறது.

சார்ஜிங் கட்டணம் குறைவு

அதே நேரத்தில் பெஸ்ட் வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டணம் 6 சதவீதமும், குடியிருப்பு கட்டிடங்களில் மின்சார சார்ஜிங் மையங்களுக்கான கட்டணம் 16 சதவீதமும் குறைகிறது.

இதேபோல தனியார் வணிக நிறுவனங்களுக்கான யூனிட் கட்டணத்தை ரூ.7.34-ல் இருந்து ரூ.6.52 ஆக குறைக்க பெஸ்ட் முடிவு செய்துள்ளது.

மின்சார ரெயில், மோனோ ரெயில், பள்ளி மற்றும் கல்லூரிகள், ஆஸ்பத்திரிகளுக்கான மின் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது.

மும்பையில் மின் கட்டணத்தை அதிகரிக்க டாடா, அதானி நிறுவனங்கள் ஏற்கனவே ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்டு இருக்கும் நிலையில், பெஸ்ட் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்த அனுமதி கேட்டு உள்ளது.

இதனால் மும்பை மக்கள் விரைவில் மின்கட்டண உயர்வை சந்திக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Tags:    

மேலும் செய்திகள்