வேலை நிறுத்தங்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது- அரசுக்கு, ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

சட்டவிரோத வேலைநிறுத்தங்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்று அரசை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

Update: 2023-03-17 18:45 GMT

மும்பை, 

சட்டவிரோத வேலைநிறுத்தங்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்று அரசை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

ஐகோர்ட்டில் மனு

மராட்டியத்தில் கடந்த 2005-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி, மாநில அரசு ஊழியர்கள் கடந்த 14-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ஆசிரியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்பட அரசு ஊழியர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தத்தை உடனடியாக வாபஸ் பெற கோரி வக்கீல் குன்ரதன் சதாவர்தே என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நேற்று தற்காலிக தலைமை நீதிபதி எஸ்.பி. கங்காபூர்வாலா, நீதிபதி சந்தீப் மார்னே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

சட்டவிரோத வேலைநிறுத்தம்

அப்போது அட்வகேட் ஜெனரல் பிரேந்திர சரப் கூறுகையில், "அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது. இந்த வேலைநிறுத்தத்தால் எந்தவொரு நபரும் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்த மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது" என்றார்.

அப்போது பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதை அரசு திட்டவட்டமாக தெரிவிக்குமாறு நீதிபதிகள் கேட்டுகொண்டனர்.

அடிப்படை வசதிகள்

மேலும் நீதிபதிகள் கூறுகையில், "எங்கள் கவலை என்னவென்றால், சாதாரண குடிமக்கள் அத்தியாவசிய சேவையை பெறுவது தடைப்படக்கூடாது. சாதாரண குடிமக்கள் பாதிக்கப்படக்கூடாது. இதுபோன்ற அச்சுறுத்தலை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை அறிய விரும்புகிறோம். மக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு எடுத்து வரும் வழிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் என்ன?

போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் யாரும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மேலும் வருகிற 23-ந் தேதிக்கு வழக்கை கோர்ட்டு ஒத்திவைத்தது. 

மேலும் செய்திகள்