மருத்துவ மாணவி கொலை வழக்கில் உடல் மீட்கப்படாததால் வாலிபருக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுப்பு

மருத்துவ மாணவி கொலை வழக்கில் உடல் மீட்கப்படாததால் வாலிபருக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுத்து உள்ளது.

Update: 2023-10-16 18:45 GMT

மும்பை, 

மருத்துவ மாணவி கொலை வழக்கில் உடல் மீட்கப்படாததால் வாலிபருக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுத்து உள்ளது.

மருத்துவ மாணவி கொலை

பால்கர் மாவட்டம் பொய்சர் பகுதியை சேர்ந்தவர் சதிச்சா சானே (வயது22). இவர் மும்பையில் உள்ள கிரான்ட் மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். 2021-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி அந்தேரிக்கு தேர்வு எழுத வந்தார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. மாணவி மாயமானது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவி தேர்வு எழுத செல்லாமல் பாந்திரா பேண்டு ஸ்டாண்டு கடற்கரைக்கு வந்தது தெரியவந்தது. இது குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு மாணவியை கொலை செய்ததாக பாந்திரா பேண்டு ஸ்டாண்டு பகுதியை சேர்ந்த மித்து சிங்கை கைது செய்தனர்.

ஜாமீன் மறுப்பு

கடற்கரையில் நள்ளிரவு நேரத்தில் தனியாக இருந்த மாணவியிடம் மித்து சிங் பேச்சு கொடுத்து பழகி, பின்னர் கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மித்து சிங்கிற்கு உடந்தையாக இருந்ததாக அப்துல் அன்சாரி என்ற வாலிபரையும் போலீசார் கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர். இந்தநிலையில் அப்துல் அன்சாரி ஜாமீன் கேட்டு மும்பை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். மனு மீதான விசாரணை நீதிபதி பிரியா பாங்கர் அமர்வு முன் நடந்தது. வாலிபர் தரப்பில் ஆஜரான வக்கீல், மாணவியின் உடலை அப்புறப்படுத்த அப்துல் அன்சாரி உதவி செய்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றார். மாணவியின் உடல் இன்னும் மீட்கப்படாத நிலையில் அப்துல் அன்சாரியை ஜாமீனில் விடுவித்தால் அது விசாரணையை பாதிக்கும் என அரசு தரப்பு வக்கீல் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மருத்துவ மாணவி கொலை வழக்கில் உடல் இன்னும் மீட்கப்படாததை சுட்டிக்காட்டி அப்துல் அன்சாரிக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்