தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் ராணுவ பகுதியில் வசித்து வருகிறார்- தங்கை மகன் பரபரப்பு தகவல்

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் ராணுவ பகுதியில் வசித்து வருவதாகவும், அவருக்கு 2-வது மனைவி இருப்பதாகவும் என்.ஐ.ஏ.விடம் தங்கை மகன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.;

Update:2023-01-18 00:15 IST

மும்பை, 

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் ராணுவ பகுதியில் வசித்து வருவதாகவும், அவருக்கு 2-வது மனைவி இருப்பதாகவும் என்.ஐ.ஏ.விடம் தங்கை மகன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தங்கை மகன் வாக்குமூலம்

மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார். அவர் நிழல் உலகில் இருந்தபடி உலகம் முழுவதும் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு கீழ் செயல்படும் கும்பல் 'டி-கேங்' என அழைக்கப்படுகிறது.

தாவூத் இப்ராகிம் இந்தியாவில் ஹவாலா பணம் மூலம் பயங்கரவாதம், குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக தாவூத் இப்ராகிமின் தங்கை ஹசினா பார்கரின் மகன் அலிஷா பார்கரிடம் என்.ஐ.ஏ. வாக்குமூலம் பெற்று உள்ளது. அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் கடந்த ஆண்டு நவம்பரில் என்.ஐ.ஏ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இடம் பெற்று உள்ளது.

ராணுவ பகுதியில் வசிக்கிறார்

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தாவூத் இப்ராகிமின் மனைவி பெயர் மைசாபின். அவருக்கு மாருக், மெக்ரீன், மாசியா என்ற 3 பெண் பிள்ளைகள், மொகின் நவாஸ் என்ற மகன் உள்ளான். மாருக் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியான்தத்தின் மகன் ஜூனைத்தை திருமணம் செய்து உள்ளார். மெக்ரீனுக்கும், மகன் மொகின் நவாசுக்கும் திருமணமாகிவிட்டது. மாசியாவுக்கு திருமணம் நடைபெறவில்லை.

தாவூத் இப்ராகிமுக்கு 2-வது மனைவி இருக்கிறார். அவர் பாகிஸ்தானி பதான். தாவூத் இப்ராகிம் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக காட்டுகிறார். அது உண்மையில்லை. தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் கராச்சி பகுதியில் அப்துல்லா காஜி பாபா தர்க்கா பகுதிக்கு பின்னால் உள்ள அந்த நாட்டின் ராணுவ இடத்தில் வசித்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்