மராட்டியத்தில் கொரோனா வேகமாக பரவினாலும் தொற்று பாதித்தவர்கள் பெரிய சிக்கலை சந்திக்கவில்லை - மருத்துவ நிபுணர்கள் தகவல்

மராட்டியத்தில் கொரோனா வேகமாக பரவினாலும், தொற்று பாதித்தவர்கள் பெரிய சிக்கலை சந்திக்கவில்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.;

Update:2022-06-13 20:11 IST

மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா வேகமாக பரவினாலும், தொற்று பாதித்தவர்கள் பெரிய சிக்கலை சந்திக்கவில்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதிகரிக்கும் கொரோனா

மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வேகம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கடந்த மே மாதத்தில் மாநிலம் முழுவதும் 9 ஆயிரத்து 354 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 5 ஆயிரத்து 980 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் ஆவார். இந்த மாதம் 1-ந் தேதி முதல் நேற்று வரை 23 ஆயிரத்து 941 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நிதி தலைநகர் மும்பையில் மட்டும் 14 ஆயிரத்து 945 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே முதல் மற்றும் 2-வது அலையின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட மராட்டியத்தில் தற்போது தொற்று அதிகரித்து வருவது அடுத்த அலையாக இருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

இந்தநிலையில் கொரோனா தொற்று அதிகரிப்பது குறித்து மும்பையில் உள்ள ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரி இணை பேராசிரியர் டாக்டர் சுனில் பைசாரே கூறியதாவது:-

சாதாரண சிகிச்சை

மராட்டியத்தில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் நோயாளிகளுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே ஏற்படுகிறது. குறிப்பாக மும்பையில் தொற்று அதிகரிக்க காரணம், இங்கு சர்வதேச பயணிகள் அதிகம் வருகின்றனர். தவிர முககவசம் அணிவது உட்பட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு உள்ளன.

தற்போது எங்களது கட்டுப்பாட்டில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் 19 நோயாளிகள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கைதிகள் மற்றும் போலீஸ் காவலில் உள்ளவர்கள் ஆவார். எந்த நோயாளிக்கும் ஆக்சிஜன் வசதி தேவைப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு பாராசிட்டமால் மருந்து மற்றும் பிற சாதாரண சிகிச்சைகள் மட்டும் வழங்குகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தடுப்பூசி உதவியது

மும்பை குளோபல் ஆஸ்பத்திரியின் டாக்டர் மஞ்சுஷா அகர்வால் கூறியதாவது:-

தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் 48 முதல் 72 மணி நேரத்தில் குணமடைகிறார்கள். எந்த நோயாளிக்கும் ரெம்டெசிவிர் அல்லது நோய் எதிர்ப்பு மருத்துவ சிகிச்சை தேவைப்படவில்லை. நோயாளிகளும் தொற்று பாதிப்பால் பெரிய சிக்கலை சந்திக்கவில்லை. இதில் நல்ல விஷயம் என்னவென்றால் தடுப்பூசி அனைவருக்கும் உதவி உள்ளது. கொரோனா அதிகரித்தாலும் கவலைப்பட ஒன்றும் இல்லை. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட அலையுடன் ஒப்பிடுகையில் இது லேசான அலை மட்டுமே.

இதுதான் நான் பார்த்ததிலேயே மிகவும் லேசான கொரோனா அலை. இருப்பினும் முககவசம் அணிவது, கொரோனா நெறிமுறைகளை பின்பற்றுவது போன்ற முன் எச்சரிக்கை நடவடிக்கையை தொடர்ந்து கடைப்பிடிப்பது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல மராட்டியத்தில் கொரோனா தொற்றின் புதிய பிறழ்வுகள் பெரிதாக கண்டறியப்படவில்லை என நிபுணர்கள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்