மரத்வாடா மண்டலத்தில் 6 மாவட்டங்களில் வறட்சி ஏற்பட வாய்ப்பு; மந்திரி தனஞ்செய் முண்டே கூறுகிறார்

மரத்வாடா மண்டலத்தில் உள்ள 6 மாவட்டங்களில் வறட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மந்திரி தனஞ்செய் முண்டே கூறிஉள்ளார்.

Update: 2023-08-25 20:00 GMT

அவுரங்காபாத், 

மரத்வாடா மண்டலத்தில் உள்ள 6 மாவட்டங்களில் வறட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மந்திரி தனஞ்செய் முண்டே கூறிஉள்ளார்.

மழைபொழிவு இல்லை

மரத்வாடா மண்டலத்தில் அவுரங்காபாத், ஜல்னா, பர்பானி, பீட், உஸ்மனாபாத், நாந்தெட், ஹிங்கோலி மற்றும் லாத்தூர் ஆகிய 8 மாவட்டங்கள் உள்ளன. இந்த பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கி தவிப்பது வழக்கமான பிரச்சினையாக மாறி உள்ளது. நடப்பு ஆண்டும் பருமழைக்காலத்தில் இந்த மண்டலத்தில் உள்ள பல மாவட்டங்களில் போதுமான மழைபொழிவு இல்லை. இந்தநிலையில் மரத்வாடா மண்டலத்தின் 8 மாவட்டங்களில் நீர் இருப்பு, பயிர்கள் மற்றும் கால்நடை தீவன பிரச்சினை குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வேளாண்துறை மந்திரி தனஞ்செய் முண்டே கூறியதாவது:-

25 சதவீத பயிர்க்காப்பீடு

மரத்வாடா மண்டலத்தில் போதுமான மழை இல்லாத காரணத்தால் 6 மாவட்டங்கள் வறட்சியை சந்திக்க வாய்ப்பு உள்ளது. இதுவரை ஹிங்கோலி மற்றும் நாந்தெட் மாவட்டங்களில் மட்டுமே சராசரி பருவமழை பெய்துள்ளது. கடந்த 21 நாட்களாக மழை பொழியாத காரணத்தால் பருவமழையின்போது நாசமான விளைபொருட்களுக்கு 25 சதவீத பயிர் காப்பீட்டு தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் மழை கணக்கிடும் தானியங்கி இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயிர்காப்பீட்டு தொகையில் ஒரு பகுதியை வழங்குவதில் இடையூறு உருவாகி உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட மத்திய மந்திரிகளை சந்தித்து கோரிக்கை வைப்பேன். மாநில மந்திரிசபை கூட்டத்திலும் இந்த பிரச்சினை குறித்து எடுத்துரைப்பேன். இது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அதுமட்டும் இன்றி ஒவ்வொரு தாலுகாவிலும் சென்று பயிர்நிலவர அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு உள்ளேன். விவசாயிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக கடன் வசூலிப்பது நிறுத்தப்பட வேண்டும். வறட்சியை கருத்தில் கொண்டு இந்த பகுதியில் கிடைக்கும் தண்ணீர் குடிநீருக்காக ஒதுக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்