போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது

Update:2023-06-02 00:15 IST

புனே, 

பாடர்லெஸ் வேர்ல்டு பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் கடந்த மே மாதம் 29-ந் தேதி அன்று புனேயில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அழையா விருந்தாளியாக வந்த ஒருவர் தன் பெயர் வினய் தியோ என்றும், பிரதமர் அலுவலகத்தில் துணை செயலாளராக பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். இருப்பினும் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே நிகழ்ச்சி முடிந்து அந்த நபர் சென்றுவிட்டார்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நிகழ்ச்சிக்கு வந்திருந்தவரின் உண்மையான பெயர் வாசுதேயோ டெய்டே என்பதும், அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்ல என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தலேகானில் பதுங்கி இருந்த வாசுதேயோ டெய்டேவை போலீசார் கைது செய்தனர்.வாசுதேயோ டெய்டே ஜல்கான் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். தற்போது தலேகானில் தங்கி உள்ளார். அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆக விரும்பினார். ஆனால் யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி போல் நடித்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்