வாடிக்கையாளரிடம் ரூ.15 லட்சம் மோசடி; நகைக்கடை உரிமையாளர் மீது வழக்கு
டோம்பிவிலியில் வாடிக்கையாளர்களிடம் ரூ. 15 லட்சம் மோசடி செய்த நகைகடை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்;
தானே,
டோம்பிவிலியை சேர்ந்த ஒருவர் அப்பகுதியில் இருந்த நகைக்கடையில் தங்கநகைகள் செய்து தருமாறு ஆர்டர் கொடுத்தார். இதற்காக கடை உரிமையாளரிடம் முன்பணம் கொடுத்தார். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் வாடிக்கையாளருக்கு நகைகள் வழங்கப்படவில்லை. இதற்கிடையில் நகைக்கடை உரிமையாளர் தனது கடையை மூடி விட்டு தலைமறைவாகி விட்டார். இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் அவர் மீது விஷ்ணு நகர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடப்பு மாதம் வரையில் 6 வாடிக்கையாளரிடம் இதே பாணியில் பணத்தை பெற்று ரூ.15 லட்சத்து 80 ஆயிரம் வரையில் மோசடி செய்தது தெரியவந்தது. இதன்பேரில் நகைக்கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.