நகர் பகுதியில் கொட்டித் தீர்த்த மழை - பஸ், ரெயில் போக்குவரத்து பாதிப்பு

மும்பையில் நகர் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியதால் பஸ், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update:2023-07-15 01:00 IST

மும்பை, 

மும்பையில் நகர் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியதால் பஸ், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நகர்பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை

மும்பையில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்தது. இதனால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இந்தநிலையில் நேற்று அதிகாலை மும்பையில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக நகர் பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. சான்ட்ராஸ்ட் ரோடு பகுதியில் 10 செ.மீ. வரையிலும், கொலபா, மலபார் ஹில், ஒர்லி பகுதிகளில் 9 செ.மீ. வரை மழை பெய்தது. புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

போக்குவரத்து பாதிப்பு

இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. வெள்ளம் தேங்கியதால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அந்தேரி சுரங்கப்பாதையில் நீர் தேங்கியதால் காலை 8.45 மணியளவில் வாகனங்கள் அந்த வழியாக செல்ல தடைவிதிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு தண்ணீர் வடிந்த பிறகு அந்த வழியாக மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. சயான் சாதனா வித்யாலயா அருகில் மரம் விழுந்த சம்பவம் காரணமாக சுமார் 6 பெஸ்ட் பஸ்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டது.

மின்சார ரெயில்கள் தாமதம்

இதேபோல மின்சார ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் காலை நேரத்தில் அலுவலகம் சென்றவர்கள் அவதி அடைந்தனர். நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் நகர் பகுதியில் 5.4 செ.மீ.யும், மேற்கு, கிழக்கு புறநகரில் முறையே 2.7 செ.மீ, 2.5 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. அடுத்த 24 மணி நேரத்துக்கு மும்பையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

மும்பையில் பெய்து வரும் மழை காரணமாக ஏரிகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 29.72 சதவீதம் தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் 65.81 சதவீதம் தண்ணீர் ஏரிகளில் இருந்தது. அதே நேரத்தில் 2021-ல் இந்த நேரத்தில் ஏரிகளில் 17.35 சதவீதம் மட்டுமே தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்