மத்திய அரசின் அவசர சட்டத்தை வீழ்த்த முடியும்- டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் பேட்டி

Update: 2023-05-25 19:00 GMT

மும்பை,

டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் அதிகாரிகள் நியமனம் மற்றும் மாற்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜனதா அல்லாத கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். மும்பையில் நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்க மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்டம் கூட்டாட்சி கட்டமைப்பை கடுமையாக பாதித்துள்ளது. பா.ஜனதா அல்லாத கட்சிகளை மக்கள் வெற்றி பெறச்செய்தால், ஆளும் மாநில அரசுகளை கவிழ்க்க பா.ஜனதா 3 வழிகளை கையாளுகிறது. அவை ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது, அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் மூலம் பயம் காட்டுவது அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட முடியாமல் தடுக்க அவசர சட்டங்களை வெளியிடுவது ஆகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வேலை செய்ய அனுமதிக்காமல் இருப்பது நாட்டுக்கு நல்லது அல்ல. பா.ஜனதா அல்லாத அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்தால், மத்திய அரசின் அவசர சட்டத்தை மாநிலங்களவையில் தோற்கடிக்க முடியும். இது ஒரு அரசியல் பிரச்சினை இல்லை. நாட்டின் பிரச்சினை. நாட்டை நேசிக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்