ஜம்போ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டதில் முறைகேடு நடக்கவில்லை- மாநகராட்சி விளக்கம்

மும்பையில் ஜம்போ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டதில் முறைகேடு நடைபெறவில்லை என மாநகராட்சி தெரிவித்து உள்ளது.;

Update:2023-01-23 00:17 IST

மும்பை, 

மும்பையில் ஜம்போ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டதில் முறைகேடு நடைபெறவில்லை என மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

முறைகேடு புகார்

கொரோனா பரவலின் போது மும்பை மாநகராட்சி சார்பில் தகிசர், பி.கே.சி, முல்லுண்டு, ஒர்லி ஆகிய இடங்களில் ஜம்போ சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த மையங்கள் அமைக்கப்பட்டதில் ரூ.100 கோடி முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா ஆசாத் மைதானம் போலீசில் புகார் அளித்து உள்ளார். புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறையும் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் ஜம்போ சிகிச்சை மைய முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகி அமலாக்கத்துறையிடம் விளக்கம் அளித்தார்.

மாநகராட்சி விளக்கம்

இந்தநிலையில் ஐம்போ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டதில் முறைகேடு நடைபெறவில்லை என மும்பை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் வெளியிட்டு தகவலில்:-

கொரோனா பரவலின் போது மாநகராட்சி ஜம்போ மையத்தில் பணிபுரிந்த டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் போன்றவர்களுக்கு ஊதியம் மட்டும் வழங்கப்பட்டது. ஊதியமாக மாநகராட்சி ரூ.33.13 கோடி மட்டுமே மாநகராட்சி டாக்டர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் வழங்கியது. எனவே ஜம்போ மையம் அமைத்ததில் ரூ.100 கோடி முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது பொய்யானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்