நவ்நீத் ரானா, ரவிரானா சிறப்பு கோர்ட்டில் ஆஜராகி பதிலளித்தனர்

ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீசார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் நவ்நீத் ரானா, ரவிரானா சிறப்பு கோர்ட்டில் ஆஜராகி பதிலளித்தனர்

Update: 2022-06-15 16:48 GMT

மும்பை,

மும்பை பாந்திராவில் உள்ள முதல்-மந்திரி உத்தவ் தக்கரேவின் மாதோஸ்ரீ இல்லம் முன் அனுமன் பஜனை பாடப்போவதாக சுயேச்சை எம்.பி. நவ்நீத் ரானா மற்றும் அவரது கணவர் எம்.எல்.ஏ. ரவி ரானா ஆகியோர் அறிவித்தனர். இதனால் மும்பையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 23-ந் தேதி இருவரும் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி சிறப்பு கோர்ட்டு வழக்கு தொடர்பாக எந்த ஊடகங்களிலும் பேசக்கூடாது, இதே தவறை மீண்டும் செய்தால் ஜாமீன் பறிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் தம்பதிக்கு ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் நவநீத் ரானா, ரவிரானா ஆகியோர் நிபந்தனைகளை மீறியதாக கூறி அவர்களது ஜாமீனை ரத்து செய்ய கோரி போலீசார் சிறப்பு கோர்ட்டில் மே 9-ந் தேதி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ரானா தம்பதி சிறப்பு கோர்ட்டில் நேரில் ஆஜராகினர். மேலும் போலீஸ் மனுவுக்கு பதிலளித்த ரானா தம்பதியர், "போலீசாரின் வழக்கு விசாரணையில் தலையிடவில்லை. மேலும் வழக்கு தொடர்பான தகவல்களை கசியவிடவில்லை. எங்கள் ஜாமீனை ரத்து செய்ய போலீசார் உறுதியான காரணத்தை தெரிவிக்க தவறிவிட்டனர்" என தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை சிறப்பு கோர்ட்டு வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்