ஈஷா அமைப்புடன் மராட்டியம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
'மண் காப்போம்' இயக்கத்தில் ஈஷா அமைப்புடன் மராட்டியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.;
மும்பை,
ஈஷா அமைப்பு, மண் வளத்தை மீட்டு எடுப்பதற்காக மேற்கொண்டு வரும் 'மண் காப்போம்' இயக்கத்துடன் இந்தியாவின் 5-வது மாநிலமாக மராட்டிய அரசுடன் நேற்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் இல்லத்திற்கு சென்ற ஜக்கி வாசுதேவ் மண் வளத்தை மீட்டெடுப்பதற்கான நடைமுறைக்கு உகந்த, அறிவியல் தீர்வுகள் அடங்கிய 'கொள்கை விளக்க கையேட்டை' முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, மும்பையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஈஷா அமைப்பின் நிறுவனத் தலைவர் ஜக்கி வாசுதேவ் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்யா தாக்கரே ஆகிய இருவரும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறி கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் பேசும்போது, "பூமியின் மேல்புறத்தில் உள்ள 15 முதல் 18 அங்குலம் வரையிலான மண் தான் பூமியின் செழிப்பிற்கும் நாம் உயிர் வாழ்வதற்கும் உதவியாக உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் நாம் சுமார் 52 சதவீதம் மேல்புற மண்ணை இழந்துவிட்டோம். எனவே, மண்ணை வளமாக வைத்திருப்பதற்கு, நாம் நம்முடைய விவசாய கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகைகள் ஜூஹி சாவ்லா, மவுனி ராய், இசை கலைஞர்கள் மீட் பிரதர்ஸ் உள்பட பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர்.