போலி என்கவுன்ட்டர்: போலீஸ்காரர்கள் மீது கொலை வழக்குப்பதிவு
2018-ம் ஆண்டு திருட்டு வழக்கில் தொடர்புடையவரை போலி என்கவுன்ட்டரில் சுட்டு கொன்ற சம்பவத்தில், போலீஸ்காரர்கள் 2 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
மும்பை,
2018-ம் ஆண்டு திருட்டு வழக்கில் தொடர்புடையவரை போலி என்கவுன்ட்டரில் சுட்டு கொன்ற சம்பவத்தில், போலீஸ்காரர்கள் 2 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்கவுன்ட்டர் சம்பவம்
பால்கர் மாவட்டம் நாலச்சோப்ராவில் 2018-ம் ஆண்டு ஜூலை 23-ந் தேதி திருட்டு வழக்கில் தொடர்புடைய ஜோகிந்தர் ரானா போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். ஜோகிந்தர் ரானா முதலில் கத்தியால் தாக்கியதால், அவரை நாலச்சோப்ரா குற்றப்பிரிவு போலீஸ்காரர்கள் மனோஜ் சக்பால், மங்கேஷ் சவான் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. எனினும் ஜோகிந்தர் ரானாவை போலீசார் போலி எண்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்துவிட்டதாக அவரது சகோதரர் சுரேந்திர ரானா மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் ஆதாரமாக ஐகோர்ட்டில் சமர்பிக்கப்பட்டது.
கொலை வழக்குப்பதிவு
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு ஜோகிந்தர் ரானாவை போலி என்கவுன்ட்டரில கொலை செய்த போலீஸ்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. மேலும் சம்பவம் தொடர்பாக தானே போலீஸ் கமிஷனர் தலைமையில் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி 4 வாரத்தில் அறிக்கையை சமர்பிக்கவும் உத்தரவிட்டது. ஐகோர்ட்டு உத்தரவை அடுத்து நாலச்சோப்ரா குற்றப்பிரிவு போலீஸ்காரர்களாக இருந்த மனோஜ் சக்பால், மங்கேஷ் சவான் ஆகியோர் மீது துலிஜ் போலீசார் கொலை, சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.