மராட்டியத்தில் 2 குழந்தைகளை கொன்ற கொடூர தாய்
மராட்டியத்தில் 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்று உடலை எரித்த தாயை போலீசார் கைது செய்தனர்.;
மும்பை,
மராட்டியத்தில் 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்று உடலை எரித்த தாயை போலீசார் கைது செய்தனர்.
இடைவிடாமல் அழுத பச்சிளம் குழந்தை
மராட்டிய மாநிலம் நாந்தெட் மாவட்டம் போகர் தாலுகா பந்துரோனா கிராமத்தை சேர்ந்த பெண் துருப்பாடா பாய் (வயது30). இவருக்கு 4 மாதம் ஆன மகள் அனுசுயா மற்றும் 2 வயது மகன் தத்தா ஆகியோர் இருந்தனர். கடந்த மாதம் 31-ந் தேதி குழந்தை அனுசுயா இடைவிடாமல் அழுது கொண்டிருந்தாள். குழந்தையின் அழுகையை நிறுத்த தாய் துருப்பாடா பாய் முயன்றார். இதில் முடியாமல் போனதால் ஆத்திரமடைந்த அவர் குழந்தையின் கழுத்தை நெரித்தார். இதில் மூச்சுத்திணறி அக்குழந்தை அனுசுயா பரிதாபமாக உயிரிழந்தது.
பசியால் அழுத சிறுவனும் கொலை
மறுநாள் காலை மகன் தத்தா பசி காரணமாக உணவு கேட்டு அழுதான். இவனது அழுகையை பொறுக்க முடியாத தாய் அதே பாணியில் கழுத்தை நெரித்து சிறுவனையும் கொலை செய்தார்.
மகள், மகனை கொலை செய்த சம்பவம் குறித்து முகேட் தாலுகாவில் வசித்து வந்த தாய் கோண்டாபாய் மற்றும் சகோதரர் மாதவ் ராஜேமட் ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த 2 பேரும் அங்கு விரைந்து வந்தனர்.
உடல்கள் எரிப்பு
அவர்கள் குழந்தைகளின் உடல்களை என்ன செய்வது என யோசித்தனர். பின்னர் உடல்களை யாருக்கும் தெரியாமல் வயல்வெளிக்கு கொண்டு சென்றனர். அங்கு வைக்கோலை உடல்களில் போட்டு தீ வைத்து எரித்தனர். இச்சம்பவம் பற்றி அறிந்த கிராம மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் போலீசார் அங்கு சென்று குழந்தைகளை கொன்ற தாய் துருப்பாடா பாயை கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரின் தாய், சகோதரரையும் கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் பெற்ற குழந்தைகளையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.