75 ஆயிரம் வேலைவாய்ப்பு கணக்கை அரசு விளக்க வேண்டும்- தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்
மராட்டிய அரசு தெரிவிக்கும் 75 ஆயிரம் வேலை வாய்ப்புகளுக்கு பின்னால் இருக்கும் கணக்கை விளக்கவேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.;
மும்பை,
மராட்டிய அரசு தெரிவிக்கும் 75 ஆயிரம் வேலை வாய்ப்புகளுக்கு பின்னால் இருக்கும் கணக்கை விளக்கவேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
பணி நியமன ஆணை
வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதற்காக 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக மராட்டிய அரசு 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக அறிவித்தது.
இதன்படி 75 ஆயிரம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்றது.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலையின்மை விகிதம்
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு 75 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் முயற்சியை தொடங்கி இருப்பது மராட்டிய மக்களுக்கு நன்மை பயக்கும். இருப்பினும் இதற்கு பின்னால் உள்ள கணக்கை மாநில அரசு விளக்க வேண்டும்.
2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியின்படி ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் என்றால் தற்போது 16 கோடி வேலைவாய்ப்புகள் ஆகிறது. இதனுடன் தற்போது அறிவிக்கப்பட்ட 75 வேலைவாய்ப்புகளை கூட்டிக்கொள்ள வேண்டுமா? அல்லது கழிக்க வேண்டுமா?
2014-ம் ஆண்டு ஏமாற்றப்பட்டதை போல மீண்டும் ஒருமுறை ஏமாறாமல் இருக்க மக்கள் இந்த விவரங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.
இதுவரை வாக்குறுதி அளிக்கப்பட்ட வேலைகள் ஒருபோதும் வழங்கப்படவில்லை. தற்போது நமது நாடு கடந்த 45 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு வேலையின்மை விகிதத்தை எட்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.