ரூ.2 ஆயிரம் நோட்டை மாற்றும் நக்சலைட்டு முயற்சி முறியடிப்பு

நக்சலைட்டு ஒருவர் மேற்கொண்ட 2,000 ரூபாய் நோட்டை மாற்றும் முயற்சி முறியடிக்கப்பட்டதுடன், 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-07-07 01:00 IST

நாக்பூர், 

நக்சலைட்டு ஒருவர் மேற்கொண்ட 2,000 ரூபாய் நோட்டை மாற்றும் முயற்சி முறியடிக்கப்பட்டதுடன், 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புழக்கத்தில் இருந்த 2.000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும் புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளை வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது செப்டம்பர் 30-ந் தேதிக்குள் மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவித்து இருந்தது. இந்தநிலையில் நாக்பூரில் உள்ள அகேரி பகுதியில் சிலர் அதிக அளவு 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சி செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் சோதனை சாவடி அமைத்து அந்த வழியாக வரும் வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் அகேரி- பேரிமிலி பகுதி வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்தி சோதனை நடத்தினர்.

பறிமுதல்

அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் திரும்ப பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளுடன் சேர்த்து மொத்தம் ரூ.27 லட்சத்து 62 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இதில் 2000 ரூபாய் நோட்டுகள் 607-ம், 500 ரூபாய் நோட்டுகள் 3 ஆயிரத்து 72-ம், 200 ரூபாய் நோட்டுகள் 7-ம், 100 ரூபாய் நோட்டுகள் 106-ம் இருந்தன. இதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது.

நக்சலைட்டு சதி

அதாவது, பிடிப்பட்ட இருவரிடமும் கிரிதர் என அடையாளம் காணப்பட்ட நக்சலைட்டு ஒருவர் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து, அவற்றை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றுமாறு கூறியதுடன், கமிஷன் பணம் போக மீதத்தை தன்னிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்ததுடன் 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரில் ஒருவர் கட்சிரோலியை சேர்ந்தவர், மற்றொருவர் சத்தீஸ்கரை சேர்ந்தவர் ஆவார். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் நக்சலைட்டுகளுக்கு பணம் செல்வது தடுக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்