நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைதானபயங்கரவாதி அப்சர் பாஷா மங்களூரு குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டார் - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான பயங்கரவாதி அப்சர் பாஷா மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

Update: 2023-07-30 20:30 GMT

மும்பை, 

நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான பயங்கரவாதி அப்சர் பாஷா மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

மிரட்டல் வழக்கில் கைது

மராட்டிய மாநிலம் புனேயில் மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரியின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு கடந்த ஜனவரி மாதம் ரூ.100 கோடி கேட்டு கொலை மிரட்டல் அழைப்பு வந்தது. இதேபோல் கடந்த மார்ச் மாதம் ரூ.10 கோடி கேட்டு மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்தார். இந்த வழக்கில் கர்நாடக மாநிலம் பெலகாவி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த ஜெயேஷ் புஜாரி கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் அந்த வழக்கில் கடந்த 14-ந் தேதி லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்சர் பாஷா கைது செய்யப்பட்டார். கர்நாடக ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த அவர் மிரட்டல் வழக்கில் கைதாகி தற்போது நாக்பூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

மங்களூரு குண்டுவெடிப்பு

அப்சர் பாஷாவிடம் என்.ஐ.ஏ. மற்றும் மராட்டிய மாநில போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மங்களூருவில் கடந்த ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு அப்சர் பாஷா மூளையாக செயல்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்து உள்ளது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "என்.ஐ.ஏ., போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த ஆண்டு மங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு அப்சர் பாஷா மூளையாக இருந்தது தெரியவந்து உள்ளது. மங்களூரு குண்டு வெடிப்பு குற்றவாளி முகமது சாரிக்கிற்கு குக்கர் வெடிகுண்டு தயாரிப்பது தொடர்பாக அப்சர் பாஷா பயிற்சி கொடுத்து உள்ளார். அப்சர் பாஷா வங்காளதேச தலைநகர் டாக்காவில் வெடிகுண்டு பயிற்சி பெற்று இந்தியா வந்தவர். பெங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பில் அவர் சம்மந்தப்பட்டுள்ளார். மங்களூரு குண்டு வெடிப்பில் குக்கர் வெடிகுண்டு பயன்படுத்தப்பட்ட முறை தொடர்பாக முகமது சாரிக்கிற்கு ஜெயிலில் வைத்து அப்சர் பாஷா பயிற்சி கொடுத்து உள்ளார்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

தடைசெய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் இருந்து அப்சர் பாஷாவுக்கு ரூ.5 லட்சம் அனுப்பப்பட்டுள்ளது. அப்சர் பாஷாவிடம் பெறப்பட்ட தகவல் விரிவான அறிக்கையாக தயார் செய்யப்பட்டு மாநில டி.ஜி.பி., உள்துறை கூடுதல் தலைமை செயலாளர், பயங்கரவாத தடுப்பு பிரிவு, என்.ஐ.ஏ., உளவு பிரிவுக்கு அனுப்பப்பட உள்ளது" என்றார். பயங்கரவாதி அப்சர் பாஷா ஜம்மு காஷ்மீரில் 2012-ம் ஆண்டு லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு ஆள்சேர்த்த வழக்கில் தண்டனை பெற்றவர் ஆவார். 2005-ம் ஆண்டு பெங்களூருவில் இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.) மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கிலும் இவர் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்