சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்- சரத்பவார் வலியுறுத்தல்

நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை அவசியம் நடத்த வேண்டும் என சரத்பவார் வலியுறுத்தி உள்ளார்.;

Update:2022-05-25 21:56 IST

மும்பை, 

நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை அவசியம் நடத்த வேண்டும் என சரத்பவார் வலியுறுத்தி உள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு

மராட்டிய உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓ.பி.சி) வழங்கப்பட்ட 27 சதவீத இடஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக ரத்து செய்தது. இந்த இடஒதுக்கீட்டை மீட்டெடுக்க மராட்டிய அரசு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது.

இந்தநிலையில் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஓ.பி.சி. பிரிவு கூட்டத்தில் கலந்துகொண்ட அந்த கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார் பேசியதாவது:-

நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கு சேர வேண்டியதை சரியாக பெற வேண்டும். நாங்கள் எதையும் இலவசமாக கேட்கவில்லை. உரிமையை பெற சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தவிர வேறு வழியில்லை.

சமூக நீதியை நிலை நாட்ட..

பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் தங்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கிய இடஒதுக்கீட்டின் காரணமாக பலனடைந்துள்ளனர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இதே போன்ற சலுகைகள் தேவை.

சலுகைகளை வழங்க அரசு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகையை துல்லியமாக அறிந்து கொள்ள வேண்டும். எனவே சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் தேவை. இந்த கணக்கெடுப்பின் புள்ளிவிவர அடிப்படையில் தான் சமூக நீதி வழங்க முடிவும்.

ஆர்.எஸ்.எஸ். எதிர்க்கிறது

பா.ஜனதாவுடன் கூட்டணியில் உள்ள பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக பேசுகிறார். ஆனால் அங்குள்ள காவி அமைப்புகள் அதற்கு எதிரான மனநிலையில் உள்ளன. ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் பையாஜி ஜோஷி சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை எதிர்க்கிறார். அது சமூகத்திற்கு தவறான செய்தியை கொண்டு சேர்க்கும் என்கிறார்.

நாட்டின் சரியான காட்சியை வெளிக்கொண்டு வருவதில் என்ன தவறு இருக்கிறது?. தேசியவாத காங்கிரஸ் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் மராட்டியத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்கும் அரசின் முயற்சியை விமர்சித்து வரும் பா.ஜனதாவை சாடிய அவர், "நீங்கள் (பா.ஜனதா) மராட்டியத்தில் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்கள், மேலும் 2014-ம் ஆண்டு முதல் மத்தியில் தொடர்ந்து ஆட்சி செய்கிறீர்கள். நீங்கள் இப்போது வரை தூங்கிக்கொண்டு இருக்கிறீர்களா?" என்று சாடினார்.

----------------

Tags:    

மேலும் செய்திகள்