பார்சலில் கடத்தி வந்த ரூ.1 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல் - நைஜீரியர் கைது

பார்சலில் கடத்தி வந்த ரூ.1 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நைஜிரீயரை கைது செய்தனர்.

Update: 2023-07-09 19:00 GMT

மும்பை, 

பார்சலில் கடத்தி வந்த ரூ.1 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நைஜிரீயரை கைது செய்தனர்.

ரூ.1 கோடி மதிப்புள்ள போதை மாத்திரை

தென்மும்பையில் வெளிநாட்டு தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த தபால் நிலையத்துக்கு சந்தேகப்படும் வகையில் பார்சல் வந்து இருப்பதாக போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த பார்சலை கைப்பற்றினர். அந்த பார்சல் நெதர்லாந்து நாட்டில் இருந்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பார்சலை பிரித்து பார்த்தபோது, சிறிய டின்களில் 996 கிராம் எடையுள்ள 2 ஆயிரம் மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டனர். பின்னர் அதன் மாதிரியை கைப்பற்றி நடத்திய பரிசோதனையில், அவை எம்.டி.எம்.ஏ. என்ற உயர்தர போதை மாத்திரைகள் என தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். இதனை தொடர்ந்து போலீசார் அந்த பார்சலை பெற வரும் நபரை பிடிக்க திட்டமிட்டனர்.

போலீசில் பிடிபட்டார்

இந்த நிலையில் நாலாச்சோப்ராவை சேர்ந்த நைஜீரியரான ஜான் சண்டே என்பவர் அந்த பார்சலை பெற வந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் போலி இந்திய பாஸ்போர்ட் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், டெல்லி, கோவா, மும்பை மற்றும் பிறநகரங்களுக்கு வினியோகம் செய்ய ஆப்பிரிக்காவில் இருந்து இந்த போதை மாத்திரைகள் வாங்கப்பட்டது தெரியவந்தது. இவர் மீது கடந்த ஆண்டு போதைப்பொருள் கடத்தியதாக வழக்கு பதிவாகி இருந்ததும், ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்த போதை மாத்திரை கடத்தலில் இவருடன் தொடர்புடைய மற்ற நபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்