கொடூர காதலன் பற்றி ஏற்கனவே போலீசில் புகார் அளித்த ஷரத்தா- பரபரப்பு தகவல்
தன்னை துண்டு, துண்டாக வெட்டி கொன்று விடுவதாக மிரட்டுவதாக காதலன் அப்தாப் பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பே ஷரத்தா போலீசில் புகார் அளித்திருந்த தகவல் வெளியாகி உள்ளது.;
மும்பை,
தன்னை துண்டு, துண்டாக வெட்டி கொன்று விடுவதாக மிரட்டுவதாக காதலன் அப்தாப் பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பே ஷரத்தா போலீசில் புகார் அளித்திருந்த தகவல் வெளியாகி உள்ளது.
35 துண்டுகளாக வெட்டி வீச்சு
வசாயை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஷரத்தா மும்பை மலாடு பகுதியில் உள்ள கால்சென்டரில் பணியாற்றி வந்தார். அப்போது வசாயை சேர்ந்த அப்தாப் அமீனை காதலித்துள்ளார். 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் வசாயில் சில ஆண்டுகள் தனியாக வசித்தனர். பின்னர் டெல்லிக்கு குடிபெயர்ந்து உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த மே மாதம் அப்தாப் அமீனை திருமணம் செய்து கொள்ளுமாறு ஷரத்தா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், அப்தாப் அமீன், ஷரத்தாவை கொலை செய்து பின்னர் உடலை 35 துண்டுகளாக வெட்டி, அதை புதிதாக வாங்கிய குளிர்சாதன பெட்டியில் 3 வாரங்களுக்கு வைத்து உள்ளார். பிறகு அதை கொஞ்சம், கொஞ்சமாக குப்பை தொட்டி, வனப்பகுதிகளில் வீசியுள்ளார்.
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த விசாரணையின் போது ஷரத்தாவை, அப்தாப் பலமுறை கொடுமைப்படுத்தியதும். இவர்களின் பிரச்சினை ஏற்கனவே போலீஸ் நிலையம் படியேறியதும் தெரியவந்துள்ளது.
வெளியான புதிய தகவல்
இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஷரத்தா, அப்தாப் தன்னை துண்டு, துண்டாக வெண்டி கொலை செய்ய வாய்ப்புள்ளதாக போலீசில் கொடுத்த புகார் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த 2020-ம் ஆண்டு ஷரத்தாவும், அப்தாப்பும் பால்கர் மாவட்டத்தில் வசித்து வந்தனர். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை குறித்து ஷரத்தா பால்கர் மாவட்டத்தில் உள்ள துலிஞ்ச் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் அவர் கூறியிருந்ததாவது:-
கொலை முயற்சி
அப்தாப் இன்று என்னை கட்டிவைத்து தாக்கினர். மேலும் எனது கழுத்தை இறுக்கி என்னை கொலை செய்ய முயன்றார். மேலும் என்னை துண்டு, துண்டாக வெட்டி வீசிவிடுவேன் என மிரட்டுகிறார். கடந்த 6 மாதமாக அவர் என்னை தாக்கி வருகிறார். ஆனால் அவரது மிரட்டலால் போலீசாரிடம் சொல்ல எனக்கு தைரியம் வரவில்லை.
அவர் என்னை அடித்து கொலை செய்ய முயன்றது அவரது பெற்றோருக்கும் தெரியும். நாங்கள் தனியாக வாழ்வது குறித்து அவரின் பெற்றோருக்கு தெரியும். வார இறுதி நாட்களில் அவர்களை சென்று பார்த்துள்ளேன்.
நாங்கள் எப்போது வேண்டுமானாலும் பொற்றோர் ஆசிர்வாதத்துடன் திருமணம் செய்துகொள்ள இருந்தோம். ஆனால் இனிமேலும் நான் அவருடன் வாழ தயாராக இல்லை. என்னை அவர் எங்கு பார்த்தாலும் கொன்று விடுவதாகவோ அல்லது காயப்படுத்தி விடுவதாகவோ பிளாக் மெயில் செய்து வருகிறார். அவரால் எனக்கு எந்த பாதிப்பும் வராமல் இருப்பதை போலீசார் உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
தனக்கு நடக்கப்போகும் கொடுமைகளை ஷரத்தா முன்கூட்டியே போலீஸ் நிலையத்தில் புகாராக அளித்து இருந்தது இதன்மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.