வழக்கில் முடிவு வெளியாகும் வரை உத்தவ் தாக்கரே அணி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க தடை- சபாநாயகருக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

வழக்கில் முடிவு வெளியாகும் வரை உத்தவ் தாக்கரே அணி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய தடை விதித்து சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2022-07-11 14:33 GMT

மும்பை, 

வழக்கில் முடிவு வெளியாகும் வரை உத்தவ் தாக்கரே அணி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய தடை விதித்து சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

தகுதிநீக்க நோட்டீஸ்

சிவசேனா அதிருப்தி அணி தலைவரான ஏக்நாத் ஷிண்டே, பா.ஜனதாவுடன் சேர்ந்து மராட்டியத்தில் ஆட்சியை பிடித்தார். அவர் கடந்த மாதம் 30-ந்தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி சட்டசபையில் புதிய சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. அடுத்த நாள் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது.

இதில் கொறடா உத்தரவை மீறியதாக ஏக்நாத் ஷிண்டே அணியினர் அளித்த புகாரின் பேரில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் ராகுல் நர்வேகர் விளக்கம் கேட்டு தகுதிநீக்க நோட்டீசை அனுப்பினார்.

தடை

இந்தநிலையில் புதிய சபாநாயகர் தேர்வு, ஷிண்டே அரசு சட்டசபையில் வெற்றி பெற்றது, தகுதிநீக்க நோட்டீஸ் போன்றவை சட்டவிரோதம் என்று கூறி உத்தவ் தாக்கரே அணியினர் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நேற்று தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஹிமா ஹோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வந்தது. அப்போது உத்தவ் தாக்கரே தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் ஆஜராகி, வழக்கில் கோர்ட்டு முடிவு எடுக்கும் வரை சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க மராட்டிய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

இதையடுத்து கோர்ட்டு முடிவு வெளியாகும் வரை உத்தவ் தாக்கரே அணி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு நீதிபதிகள் தடை விதித்தனர். இது தொடர்பான உத்தரவை சபாநாயகருக்கு தெரிவிக்கும்படி, வழக்கு விசாரணையில் கவர்னர் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துசார் மேத்தாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வரவேற்பு

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை உத்தவ் தாக்கரே அணி தலைவர்கள் வரவேற்று உள்ளனர்.

இது தொடர்பாக சஞ்சய் ராவத் எம்.பி. கூறுகையில், "இது ஷிண்டே அரசு உயிர்வாழ்வதற்கான கேள்வி அல்ல. ஜனநாயகம் தழைப்பதற்கான கேள்வி. மேலும் நியாயமான மற்றும் சுதந்திர விசாரணைக்கான பரீட்சை. நாங்கள் நீதித்துறையை நம்புகிறோம்" என்றார்.

-------

Tags:    

மேலும் செய்திகள்