கொப்போலி அருகே பயங்கர விபத்து; 5 கார்கள் மீது மோதி கவிழ்ந்த கன்டெய்னர் லாரி - பெண் உள்பட 2 பேர் பலி
கொப்போலி அருகே தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி, 5 கார்கள் மீது மோதிவிட்டு கவிழ்ந்த விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.;
மும்பை,
கொப்போலி அருகே தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி, 5 கார்கள் மீது மோதிவிட்டு கவிழ்ந்த விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
5 கார்கள் மீது மோதியது
புனேயில் இருந்து நேற்று காலை மும்பை நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று வந்தது. லாரி காலை 9 மணியளவில் ராய்காட் மாவட்டம் கொப்போலி அருகே மும்பை - புனே எக்ஸ்பிரஸ் விரைவு சாலையில் வேகமாக வந்து கொண்டு இருந்தது. திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடிய லாரி தடுப்பு சுவரை தாண்டி மறுபுறம் உள்ள சாலைக்கு சென்று 5 கார்கள் மீது மோதிவிட்டு கவிழ்ந்தது.
2 பேர் பலி
இந்த விபத்தில் கார்களில் வந்த பெண் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பெண்கள் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து போலீசார், தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் லாரி மோதி நொறுங்கிய காரில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்களை போராடி மீட்டனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் மூலம் சாலையில் இருந்து அகற்றினர். இந்த விபத்து காரணமாக நேற்று காலை மும்பை - புனே எக்ஸ்பிரஸ் விரைவு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.