பாந்திரா குடிசைப்பகுதியில் பயங்கர தீ விபத்து- 12 குடிசை வீடுகள் எரிந்து நாசம்
மும்பை,
மும்பை பாந்திரா மேற்கு நர்கிஸ் தத் நகரில் உள்ள குடிசை வீட்டின் ஒன்றில் நேற்று அதிகாலை 4.40 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் உஷார் படுத்தப்பட்டு அங்கிருந்து வெளியேறினர். அங்கு பற்றிய தீ மற்ற குடிசை வீடுகளுக்கும் பரவியது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 8 வாகனங்கள் மற்றும் 7 தண்ணீர் டேங்கர் வாகனங்களுடன் விரைந்து வந்தனர். அங்கு பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபடடனர். காலை 8 மணி அளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 19 மற்றும் 30 வயதுடைய 2 பேர் தீக்காயமடைந்தனர். அவர்கள் பாபா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீ விபத்தில் அங்கிருந்த 10 முதல் 12 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசமானது. போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.