மும்பை போரிவிலியில் பயங்கரம்; ஆட்டோ டிரைவரை பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசிய கும்பல் - ஒருவர் கைது

மும்பை போரிவிலியில் ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்தி, பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசிய கும்பலை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-14 20:00 GMT

மும்பை,

மும்பை போரிவிலியில் ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்தி, பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசிய கும்பலை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

போலீசில் புகார்

மும்பை போரிவிலி கிழக்கு தவுலத் நகர் பகுதியை சேர்ந்தவர் பபன் சுர்வாசே (வயது55). ஆட்டோ டிரைவரான இவரது மகன் அண்மையில் போதைக்கு அடிமையாகி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தான். இதனால் அதே பகுதியை சேர்ந்த ராகேஷ் என்பவர் தான் தனது மகனை போதைக்கு அடிமையாக்கியதாக கருதினார். இது தொடர்பாக அவரிடம் வாக்குவாதம் அவ்வப்போது ஏற்பட்டு வந்ததால் ராகேசுக்கு எதிராக போலீசில் புகார் அளித்து இருந்தார். இந்த நிலையில் பபன் சுர்வாசே நேற்று முன்தினம் போரிவிலி வட்டார அலுவலக போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றிருந்தார். அப்போது போரிவிலி கிழக்கு-மேற்கு பகுதியை இணைக்கும் சுதிர் பட்கே மேம்பாலத்தில் நின்ற ராகேஷ் ஆட்டோவை வழிமறித்தார்.

ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்

அவருடன் வந்த மற்ற 2 கூட்டாளிகள் சேர்ந்து போலீசில் புகார் அளித்த விவகாரம் குறித்து பபன் சுர்வாசேவிடம் வாக்குவாதம் செய்தனர். இதில் ஆத்திரமடைந்த கும்பல் பபன் சுர்வாசேவை உருட்டு கட்டையால் தாக்கி கத்தியால் குத்தினர். பின்னர் பாலத்தின் கீழே கழிமுக கால்வாயில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். படுகாயமடைந்த பபன் சுர்வாசே உயிருக்கு போராடினார். தகவல் அறிந்த போலீசார் தீயணைப்பு படையினருடன் அங்கு சென்று அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். ராகேஷ் உள்பட மற்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்