சாவர்க்கர் பற்றிய பாடத்தை நீக்கியது துரதிருஷ்டவசமானது - நிதின் கட்காரி கூறுகிறார்
பாடப்புத்தகத்தில் சாவர்க்கர் பற்றி பாடத்தை நீக்கியது துரதிருஷ்டவசமானது என மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.;
நாக்பூர்,
பாடப்புத்தகத்தில் சாவர்க்கர் பற்றி பாடத்தை நீக்கியது துரதிருஷ்டவசமானது என மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
சமூக சீர்திருத்தவாதி
கார்நாடக மாநிலத்தில் சமீபத்தில் பதவியேற்ற காங்கிரஸ் தலைமையிலான அரசு பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து சாவர்க்கர் மற்றும் ஹெட்கேவார் பற்றி பாடங்களை நீக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் சாவர்க்கர் பற்றிய புத்தக வெளியீட்டு விழா நாக்பூரில் நேற்று நடந்தது. இதில் மத்திய மந்திரி நிதின் கட்காரி கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-
நாட்டுக்காக அனைத்தையும் கொடுத்த ஒரு நபரும்(சாவர்க்கர்) அவரது குடும்பத்தினரும் அவமானத்தை சந்திக்க நேரிட்டது துரதிருஷ்டவசமானது. சாவர்க்கரின் இந்துத்வா என்பது அனைத்தையும் உள்ளடக்கியது. சாதிவெறி மற்றும் வகுப்புவாதங்களில் இருந்து விடுபட்டது. சாவர்க்கர் ஒரு சமூக சீர்த்திருத்தவாதி, அவர் எங்களுக்கு முன்மாதிரி ஆவார்.
வேதனை
டாக்டர் ஹெட்கேவார் மற்றும் சாவர்க்கர் பற்றிய பாடங்கள் பள்ளி பாட புத்தகத்தில் இருந்து நீக்கப்படுவது மிகவும் துரதிருஷ்டவசமானது. இதுபோல வேதனையானது வேறு ஏதும் இல்லை. என்னுடன் நல்லுறவில் இருந்த தேசிய தலைவர் ஒருவர் சாவர்க்கரை விமர்சித்தார். அப்போது அவரிடம் சாவர்க்கரை பற்றி தெரியாமல் அவரை விமர்சிக்க கூடாது என்று கூறினேன். அவர் எனது வார்த்தைகளுக்கு மதிப்பளித்தார். இனிமேல் சாவர்க்கரை பற்றி கருத்து சொல்லமாட்டேன் என்று தெரிவித்தார். சாவர்க்கர் மற்றும் சுவாமி விவேகானந்தரால் பரப்பப்பட்ட இந்தியா மற்றும் இந்து கலாசாரம் ஒன்றுதான். இன்றைய இளம் தலைமுறையினருக்கு அவர்களின் சித்தாந்தம் மற்றும் சவார்க்கர் நாட்டிற்காக செய்த தியாகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.