அதானி குழுமத்திற்கு எதிரான விசாரணை விவரங்களை வெளியிட வேண்டும் - 'செபி' அமைப்புக்கு உத்தவ் தாக்கரே கட்சி கடிதம்
அதானி குழும நிறுவனத்திற்கு எதிரான விசாரணை விவரங்களை வெளியிட வலியுறுத்தி செபி அமைப்புக்கு உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி.யான பிரியங்கா சதுர்வேதி கடிதம் எழுதி உள்ளார்.;
மும்பை,
அதானி குழும நிறுவனத்திற்கு எதிரான விசாரணை விவரங்களை வெளியிட வலியுறுத்தி செபி அமைப்புக்கு உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி.யான பிரியங்கா சதுர்வேதி கடிதம் எழுதி உள்ளார்.
அதானி குழும மோசடி
பிரபல தொழில் அதிபர் கவுதம் அதானியின் நிறுவனம் பங்கு சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த பங்கு சந்தை ஆய்வு நிறுவனமான 'ஹிண்டன்பர்க்' சமீபத்தில் குற்றம்சாட்டியது. அதில் அதானி குழும நிறுவனங்கள் தங்களின் நிறுவன பங்கு மதிப்பை உயர்த்தி காட்டி அதிக கடன் பெற்றதாகவும், பங்கு சந்தை மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டு இருந்தது.
இந்த சர்ச்சையை தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்தன. இந்த நிலையில் அதானி குழும மோசடி குறித்து நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையே உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி எம்.பி. பிரியங்கா சதுர்வேதி அதானி குழுமத்தின் சில நிறுவனங்களுக்கு எதிராக நடக்கும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட வலியுறுத்தி பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு(செபி) கடிதம் எழுதி உள்ளார்.
மேலும் அவர் அந்த கடிதத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நம்பிக்கையை அதிகரிக்கும்
அதானி குழுமத்தின் சில நிறுவனங்களுக்கு எதிராக கடந்த 2021-ம் ஆண்டு செபி அமைப்பு விசாரணையை தொடங்கியது. ஆனால் இந்த வழக்கு இன்றளவும் முடிக்கப்படாமல் உள்ளது. அதற்கான அறிக்கை எதுவும் வெளியாகவில்லை அல்லது தாமதத்திற்கான காரணமும் வெளியிடப்படவில்லை. இந்த விசாரணை விவரங்கள் மற்றும் விசாரணை முடிவதில் உள்ள தாமதத்திற்கான காரணங்கள் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
பங்கு விலைகள் நிர்ணயிப்பதில் நிறுவனம் செய்யும் குளறுபடிகள் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் செபி கவனிக்க வேண்டும். இது வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கடிதத்தல் கூறி உள்ளார்.