பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மின்சார ரெயில் பெண்கள் பெட்டியில் சீருடை அணிந்த போலீஸ் பாதுகாப்பு - ரெயில்வே போலீசார் நடவடிக்கை
பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த மின்சார ரெயிலில் பெண்கள் பெட்டியில் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.;
மும்பை,
பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த மின்சார ரெயிலில் பெண்கள் பெட்டியில் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெண்களுக்கு பாதிப்பு
மும்பையின் உயிர்நாடியாக கருதப்படும் மின்சார ரெயில்களில் பெண்கள் பெட்டியில் தனியாக பயணம் செய்யும் பெண்களை குறிவைத்து அரங்கேறும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட ஓடும் மின்சார ரெயிலில் பெண்கள் பெட்டியில் தனியாக பயணம் செய்த 2 பெண்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதல் சம்பவத்திற்கு ஆளாகினர். இதில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்தனர். எனவே புறநகர் மின்சார ரெயில்களில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக பெண்கள் பெட்டிகளில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை சீருடை அணிந்த போலீசாரை பணியமர்த்த ரெயில்வே போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
உதவி எண்
மும்பை புறநகர் ரெயில் வழித்தடம் மத்திய, மேற்கு, துறைமுகம், டிரான்ஸ்ஹார்பர் மற்றும் பேலாப்பூர்- நெருல்- கோட்கோபர்(உல்வே) வரை பரவி உள்ளது. இந்த வழித்தடங்களில் இரவு நேரங்களில் 1,041 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இவர்களின் பாதுகாப்புக்காக சுமார் 1,200-க்கும் மேற்பட்ட சீருடை அணிந்த போலீசார் பணி அமர்த்தப்படுவார்கள் என்று தெரிகிறது. இதில் ரெயில் பெட்டிகளில் 640 போலீசாரும், நடைமேடையில் 600 போலீசாரும் பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது. பெண் பயணிகள் தங்கள் பயணம் செய்யும் பெட்டியில் பாதுகாப்பு பணிக்கு ஆள் இல்லை என தெரிந்தால் உடனடியாக 1512 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இந்த தகவலை ரெயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர்.