வீட்டுக்கடனை அடைக்க காதலியுடன் சேர்ந்து திருடிய வாலிபர் கைது- 8 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

வீட்டுக்கடனை அடைக்க மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை காதலியுடன் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 திருட்டு மோட்டார் சைக்கிள்களை மீட்டனர்.;

Update:2023-04-26 00:15 IST

மும்பை, 

வீட்டுக்கடனை அடைக்க மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை காதலியுடன் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 திருட்டு மோட்டார் சைக்கிள்களை மீட்டனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

நவிமும்பை, ராய்காட் பகுதியில் அதிகளவில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போவதாக ஏராளமான புகார்கள் போலீசாருக்கு வந்தன. இந்த புகார்கள் தொடர்பாக போலீசார் சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு ஆணும், பெண்ணும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர்கள் மோட்டார் சைக்கிளை புனே நோக்கி எடுத்து செல்வதும் தெரியவந்தது.

கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம், அவர்கள் சனி, ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களில் நவிமும்பைக்கு வந்து கைவரிசை காட்டி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவத்தன்று ரசாயனி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட வந்த அவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில், பிடிபட்டவர்கள் புனே காரடி பகுதியை சேர்ந்த விக்ரம் ராம் (வயது36) மற்றும் அவரது காதலி அனுராதா (31) என்பது தெரியவந்தது.

கடனை அடைக்க கைவரிசை

விக்ரம் ராம் 2 ஆண்டுகளுக்கு முன் மனைவியை விவாகரத்து செய்தார். தனியார் நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்க்கும் அவர் வங்கி கடனுக்கு வீட்டை வாங்கி தவணை செலுத்தி வந்தார். அவருக்கு, அதே பகுதியை சேர்ந்த விவாகரத்தான பெண் அனுராதாவுடன் (31) பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அதன்பிறகு அவரால் வீட்டு கடனை செலுத்த முடியவில்லை.

எனவே கடனை அடைக்க அவர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட முடிவு செய்தார். போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க அனுராதாவையும் திருட்டில் ஈடுபடுத்தியது விசாரணையில் தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 8 திருட்டு மோட்டார் சைக்கிள்களை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்