விண்ணில் மிதக்கும் தங்கம்
வானியல் அதிசயங்கள் நாளுக்கு நாள் உலகத்தை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன.;
வானியல் அதிசயங்கள் நாளுக்கு நாள் உலகத்தை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. நவீன தொழில் நுட்பங்களைக் கொண்டு, வானியல் ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், புதைந்து கிடக்கும் அதிசயங்களுக்கு அளவே இல்லை என்பதே உண்மை. வியாழன், செவ்வாய் கோள்களுக்கு இடையே சைக்கி (psyche) என பெயரிடப்பட்ட விண்கல் ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது.
226 கி.மீ. அகலமுள்ள இந்த விண்கல்லில் இரும்பு, நிக்கல், தங்கம் போன்ற உலோகங்கள் இருக்கும் எனத் தெரிகிறது. இவற்றின் மதிப்பு சுமார் 10 ஆயிரம் குவாடிரில்லியன் டாலர்கள் கொண்டதாக இருக்கலாம் என நாசா மதிப்பிட்டுள்ளது. அதாவது பூமியின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பை விட பல மடங்கு விலை மதிப்பு மிக்க கனிமங்கள் இந்த விண்கல்லில் புதைந்து கிடக்கின்றன. எனவே, சைக்கி விண்கல்லில் குறைந்த செலவில் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ள நாசா, ரோபோடிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. விண்கல்லில் உள்ள கனிமங்களின் அளவு, காந்தப்புலம் ஆகியவற்றை ஆய்வு செய்து மேற்பரப்பை படம் பிடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சைக்கி விண்கல்லை நோக்கிய பயணத்தை நாசாவின் விண்கலம் அடுத்த ஆண்டு மேற்கொள்ளும். அங்கு மேற்கொள்ளப்பட இருக்கும் ஆய்வுகள், உலக அளவில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வருமா என்பது ஆய்வின் முடிவுகளை பொருத்தே இருக்கும்.