தடைகளை உடைத்து பதக்கம் வென்ற பெண் போலீஸ்

குடியரசுத் தலைவர் மாளிகையில் பாதுகாப்புப் படையில் உதவி சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் லலிதா, நெதர்லாந்தில் நடந்த 2022 உலக போலீஸ் மற்றும் தீயணைப்புப் படையினருக்கான போட்டியில் 5 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.

Update: 2022-09-16 16:22 GMT

ஒரு வெற்றி அவரை உற்சாகப் படுத்தி இருக்கிறது. இது குறித்து அவர் கூறுகையில், "12 வயதிலேயே விளையாட்டில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதன்பின்னர் உள்ளூர் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றேன். மைதானமே என் வீடாக மாறியது. 1995-ம் ஆண்டு என் அண்ணன் இறந்த பிறகு குடும்பச் சூழல் மோசமானது. விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அரசு வேலைக்குத் தயாரானேன். 2000-ல் டெல்லி போலீஸில் சேர்ந்தேன். மீண்டும் விளையாட்டின்மீது ஆர்வம் ஏற்பட்டது. பயிற்சியின்போது சிறந்த கமாண்டோ என அறிவிக்கப்பட்டேன். அப்போதிலிருந்து என் திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறேன். தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்றேன்.

இதற்கிடையில், திருமணமாகி குழந்தைக்கும் தாயானேன். இது என் விளையாட்டுக்குத் தடையாக இருந்தது. பிரசவத்துக்குப் பிறகு எடை அதிகரித்ததால் ஓடுவதற்கு சிரமமாக இருந்தது. கண்ணாடியில் என்னைப் பார்த்து வருத்தப்படுவேன். அந்த சமயத்தில் என் கணவர்தான் ஊக்கமளித்தார். நான் மீண்டும் எடை குறைந்து உடற்கட்டோடு வர அவர்தான் காரணம். அதன்பிறகு, வழக்கம்போலவே போலீஸ் வேலையுடன், என் விளையாட்டு கனவை துரத்தினேன். அதற்கு பலனாகவே, இப்போது 5 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்திருக்கிறது. இந்த வயதில் இனி ஒலிம்பிக்கில் பங்கேற்பது குறித்து கனவு காண முடியாது, இருந்தாலும், ஒலிம்பிக்கில் பங்கேற் போருக்கு பயிற்சி அளிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்