கிரீன்லாந்தில் 1000 ஆண்டுகள் இல்லாத அளவு வெப்பநிலை... எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

கடல்மட்டத்தை 7 மீட்டர் வரை உயர்த்தும் அளவிற்கு போதுமான தண்ணீர் கிரீன்லாந்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-01-19 06:05 GMT

கோப்புப்படம் 


கிரீன்லாந்தில் உள்ள பனிக்கட்டிகள், அதன் அளவு காரணமாக உலகளாவிய காலநிலை அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. கிரீன்லாந்து பனிக்கட்டியை ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகின்றனர்.

ஜெர்மனியில் உள்ள ஆல்பிரட் வெஜெனர் இன்ஸ்டிடியூட் ஆய்வாளர்கள், கிரீன்லாந்தின் மிகப்பெரிய பனிக்கட்டியை அதன் மையத்தில் 100 அடி வரை துளையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், குறைந்தபட்சம் கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலையை கிரீன்லாந்து எதிர்கொண்டுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை நேச்சர் இதழில் வெளியிட்டனர்.

கடல் மட்ட உயர்வுக்கு முதன்மையான காரணமான கிரீன்லாந்தின் பனி உருகுவது உலகெங்கிலும் உள்ள கடலோர நகரங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, 2001 மற்றும் 2011 க்கு இடைப்பட்ட காலத்தில் முந்தைய நூற்றாண்டை விட சராசரியாக 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

கிரீன்லாந்தில் சமீபத்திய வெப்பநிலை உயர்வுக்கு மனிதனால் ஏற்படும் புவி வெப்பமடைதலே காரணம் என்று அதன் முடிவு தெரிவித்துள்ளது.

ஆய்வின் முதன்மை ஆசிரியரும் ஆல்பிரட் வெஜெனர் இன்ஸ்டிட்யூட்டின் உறுப்பினருமான மரியா ஹோர்ஹோல்ட் இதுகுறித்து கூறும்போது, "கடல் மட்ட உயர்வுக்கு தற்போது கிரீன்லாந்து மிகப்பெரிய காரணமாக உள்ளது.

மேலும் நாம் இதேபோல் கார்பன் உமிழ்வைத் தொடர்ந்தால், 2100ல் கிரீன்லாந்து, கடல் மட்ட உயர்வுக்கு 50 சென்டிமீட்டர் வரை பங்களித்திருக்கும். மேலும் இது கடலோரப் பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில் காலநிலை வல்லுநர்கள், விஞ்ஞான ஆய்வுகளை மேற்கோள் காட்டி, மனித செயல்பாடு பூமியை ஆபத்தான காலநிலை முனையின் விளிம்பிற்குத் தள்ளுகிறது என்றும் மனிதகுலத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் நமது கிரகத்தைப் பாதுகாக்கவும் உடனடி நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், கடல்மட்டத்தை 7 மீட்டர் வரை உயர்த்தும் அளவிற்கு போதுமான தண்ணீர் கிரீன்லாந்தில் இருப்பதாகவும், வெப்பமடைதல் காரணமாக ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் டிரில்லியன் கணக்கான டன் பனி அங்கு உருகி வருகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Tags:    

மேலும் செய்திகள்