ரூ.1½ கோடி சம்பளத்தில் கணவனை பணியமர்த்திய மனைவி

ஸ்டார்ட் அப் துறையில் பெண்கள் அதிகப்படியான நிறுவனங்களை தொடங்கி அசத்தி வருகிறார்கள். இதில் ஒருவர் தான் பூனம் குப்தா.

Update: 2023-02-07 15:10 GMT

உலகளவில் வர்த்தகத் துறையில் பெண்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறார்கள். குறிப்பாக வல்லரசு நாடுகளில் பெண்கள் உயர் பதவிகளில் மட்டும் அல்லாமல், தலைவர் பதவிகளிலும் அங்கம் வகிக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ஸ்டார்ட் அப் துறையில் பெண்கள் அதிகப்படியான நிறுவனங்களை தொடங்கி அசத்தி வருகிறார்கள். இதில் ஒருவர் தான் பூனம் குப்தா. வர்த்தக உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு பூனம் குப்தா சிறந்த முன்னுதாரணம்.

பூனம் குப்தா 2002-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து ஸ்காட்லாந்துக்கு குடிபெயர்ந்தார். பின்னர் இந்தியாவுக்கு திரும்பி வரவே இல்லை. ஸ்காட்லாந்து நாட்டில் தற்போது ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கி ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் வியக்க வைக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். இந்த நிலையில் தான் பூனம் குப்தா இங்கிலாந்தின் சிறந்த பெண் தொழில்முனைவோர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். சமீபத்தில் அயல் நாடுகளில் வாழும் இந்தியர்கள் (என். ஆர்.ஐ) தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பூனம் குப்தா இந்தியா வந்திருந்தார். அந்த சந்திப்பில் ஒரு சுவாரசியமான நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார்.

''ஒருமுறை என் கணவரிடம் என்னுடைய நிறுவனத்தில் சேருமாறு கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர், நான் ஈட்டும் சம்பளத்தை உன்னால் கொடுக்க முடியாது என்று கூறினார். எனது கணவரின் அப்போதைய சம்பளம் ஆண்டுக்கு ரூ.80 லட்சம். இருப்பினும் எனது தொழிலை மேம்படுத்திக்கொண்டு பெரிய அளவில் வளர்ந்த நிலையில், எனது கணவரை ரூ.1½ கோடி சம்பளத்தில் என்னுடைய நிறுவனத்திலேயே பணி அமர்த்திக் கொண்டேன்'' என்று பெருமிதமாக சொல்கிறார்.

2002-ம் ஆண்டில் பூனம் குப்தா, ஸ்காட்லாந்தில் பணிபுரிந்து வந்த புனித் குப்தாவை திருமணம் செய்து கொண்டார். கணவர் சுகாதாரத் துறையில் பணியாற்றி வந்தார். பூனம் குப்தா எம்.பி.ஏ. படித்தவர். ஆனால் அங்கு பணிபுரிவதற்குரிய அனுபவம் இல்லாததால் அவருக்கான வேலைவாய்ப்பு ஸ்காட்லாந்தில் கிடைக்கவில்லை. எனவே, சொந்தமாகத் தொழில் தொடங்க முடிவு செய்தார். இப்படித்தான் பூனம் குப்தாவின் ஸ்டார்ட் அப் தொழில் ஆரம்பமானது.

''ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் சந்தையில் சிறந்த தயாரிப்புகளை விற்க வேண்டும் என்பது என்னுடைய திட்டம். ஆனால் உலகம், எனக்கென மற்றொரு தொழிலை கட்டமைத்து கொடுத்தது. ஆம்...! பெரிய நிறுவனங்களின் உற்பத்தி ஆலையில், மிச்சமாகும் காகித கழிவுகளை அப்புறப்படுத்த அவர்கள் பெரும் பாடுபட்டனர். அந்த பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அந்தக் காகிதங்களை அப்புறப்படுத்த அந்த நிறுவனங்கள் பல கோடிகளை, ஒவ்வொரு வருடமும் செலவழிக்கிறது. அப்படி தூக்கி வீசப்படும் காகித கழிவுகளை, மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த முடியும் என்பதை 10 மாத தீவிர ஆராய்ச்சிக்கு பிறகு தெரிந்து கொண்டேன். பின்னர் இத்தாலி, பின்லாந்து, சுவீடன் மற்றும் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களிடம் இருந்து பழைய காகிதங்களை வாங்கத் தொடங்கினேன்.

என்னுடைய முதல் வாடிக்கையாளர் ஒரு இத்தாலிய நிறுவனம். அவர்களிடமிருந்து வாங்கிய 'ஸ்கிராப்' பேப்பருக்கு பின்பு பணம் தருவதாக அந்த நிறுவனத்திடம் கூறினேன். பேப்பர் குப்பைகள் அந்த நிறுவனத்திற்கு பெரும் தலைவலியாக இருந்ததால், அவர்களும் ஒப்புக்கொண்டனர். இதற்கிடையில் ஏற்கனவே இந்தியாவில் பழைய காகிதத்தை வாங்குபவரை கண்டுபிடித்து வைத்திருந்தேன். அவர்களிடம் பழைய காகிதங்களை ஒப்படைத்து, ஒரு மாத காலத்திற்குள் பணத்தை வாங்கிக்கொண்டேன். எனது முதல் ஒப்பந்தத்தில் இரண்டு கண்டெய்னர் மதிப்புள்ள காகிதங்களுக்கு ஈடாக 40 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டினேன்'' என்றார்.

இத்தகைய ஒப்பந்தங்கள் மூலம் தொடர்ந்து பணம் சம்பாதித்து வந்த பூனம் குப்தா 2004-ம் ஆண்டில், ஸ்காட்லாந்தில் தனது நிறுவனத்தை பதிவு செய்தார். இந்த வர்த்தகத்தில் லாபம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து கொண்டு இருந்தது. தனது நிறுவனத்தில் பங்கு கொள்ள ஒரு பார்ட்னர் தேவைப்பட்ட நிலையில் கணவரை அணுகி இருக்கிறார். அவரும் முதலில் பகுதி நேரமாக சேர்ந்து, பின்னர் முழுநேர பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இப்போது பூனம் குப்தா தனது கணவருக்கு ஆண்டுக்கு ரூ.1½ கோடியை சம்பளமாக வழங்கி வருகிறார். கணவன், மனைவி இருவரும் ஒன்றாக இணைந்து தங்கள் தொழிலை விரிவுபடுத்துகிறார்கள்.

பழைய காகிதம் தாண்டி கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி வணிகங்களிலும் வர்த்தகத்தை தொடங்கினார்கள். இந்தத் தடாலடி வளர்ச்சி மூலம் அவர்களது நிறுவனத்தின் நிகர மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியது. தற்போது இருவரும் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கின்றனர். பூனம் குப்தா மற்றும் புனித் குப்தா தற்போது 9 நிறுவனங்களை சொந்தமாக வைத்துள்ளனர். 7 நாடுகளில் அலுவலகங்களை திறந்து பல்வேறு துறைகளில் வர்த்தகம் செய்து வருகிறார்கள்.

''பெண்கள் நினைத்தால், எதையும் சாதிக்கலாம். அதற்கு முதலீடு அவசியமல்ல, முயற்சிதான் அவ சியம். இந்த தத்துவத்திற்கு, நான்தான் சிறப்பான உதாரணமும்கூட. என்னுடைய முயற்சிகளை, என் கணவர் பெரிதாக பாராட்டவில்லை. இருப்பினும், என்னுடைய கனவை சாதித்து காட்டியதும், அவரும் என்னுடைய நிறுவனத்தில் ஒருவராக மாறிவிட்டார். அதனால், உங்களுடைய கனவுகளுக்கு உயிர் கொடுங்கள். அது உங்களை ஒரு தொழில்முனைவோராக, ஒரு சாதனையாளராக மாற்றும்'' என்ற தன்னம்பிக்கை வரிகளை விதைக்கிறார், பூனம் குப்தா.

Tags:    

மேலும் செய்திகள்