எலுமிச்சை ஜூஸ் ஏற்படுத்தும் பக்க விளைவுகள்

எந்தவொரு உணவு பொருளையும் அளவுக்கு அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எலுமிச்சை நீரும் அப்படிப்பட்டதுதான். கோடைக்கு இதமாக பலரும் எலுமிச்சை ஜூஸ் பருகுகிறார்கள்.

Update: 2022-05-24 16:25 GMT

உடல் எடையை குறைக்க விரும்பும் பெண்கள் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு கலந்த பானத்தை உட்கொள்கிறார்கள்.

அது செரிமானத்திற்கு உதவும், சருமத்திற்கு நன்மை பயக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட உணவு நல்லது என்று குறிப்பிடப்பட்டால், அதை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல. எலுமிச்சை சாறை அதிகமாக ருசிப்பது நன்மை அளிக்காது. உண்மையில், எலுமிச்சை நீரை அதிகமாக பருகினால் பக்க விளைவுகள் ஏற்படும்.

பற்சிதைவு:

எலுமிச்சை, அதிக அமிலத்தன்மை கொண்ட சிட்ரஸ் பழ வகையை சேர்ந்தது. ஒரு நபர் எலுமிச்சை சாறை அதிகமாகவோ, அடிக்கடியோ உட்கொண்டால் அதிலுக்கும் அமிலத்தன்மை காரணமாக பல் சிதைவை சந்திக்க நேரிடும். பற்களில் எலுமிச்சை சாறு நேரடியாக வெளிப்படுவதை தவிர்க்க ஸ்ட்ரா பயன்படுத்தலாம். எலுமிச்சை ஜூஸ் உட்கொண்ட பிறகு பல் துலக்கும் வழக்கத்தையோ, வாய் கொப்பளிக்கும் வழக்கத்தையோ பின்பற்றலாம். எலுமிச்சை சாறுடன் நிறைய தண்ணீர் குடிப்பது பல் சிதைவு செயல்முறையை தாமதப்படுத்தக்கூடும். எனவே எலுமிச்சை சாறு பருகியவுடன் பற்களை பராமரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஒற்றைத்தலைவலி:

சிட்ரஸ் பழங்கள் பெரும்பாலும் ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலியை தூண்டும். எலுமிச்சையில் டைரமைன் என்ற இயற்கையான மோனோ அமைன் உற்பத்தி செய்யப்படுகிறது. இது அடிக்கடி தலைவலியை உண்டாக்கும். எனவே, தொடர்ந்து தலைவலியை அனுபவிப்பவராக இருந்தால், எலுமிச்சை சாறு உட்கொள்வதை குறைக்க வேண்டும். சிட்ரஸ் பழங்களுக்கும் ஒற்றைத் தலைவலிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

வயிற்று உபாதை:

சிட்ரஸ் பழங்களை அதிகமாக உட்கொள்பவர்கள் பெரும்பாலும் இரைப்பை குடல் பிரச்சினைகள், நெஞ்செரிச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இத்தகைய அறிகுறிகளை உணர்ந்தால் எலுமிச்சை தண்ணீரை குடிப்பதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும். இரைப்பை உணவுக்குழாய் ரிப்ளக்ஸ் நோய் உள்ளவர்கள் எலுமிச்சை சாறு அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

வாய்ப்புண்:

சிட்ரஸ் பழங்கள் வாய் புண்களை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. எனவே வாய் பகுதியில் வெடிப்பு, கொப்புளங்கள், புண்கள் இருந்தால் அவை ஆறும் வரை எலுமிச்சை சாறு பருகாமல் இருப்பது நல்லது.

நோய்க்கிருமிகள்:

எலுமிச்சையின் தோல் பகுதிகள் தீங்கு விளைவிக்கும் நோய் கிருமிகளுக்கு புகலிடம் அளிக்கின்றன. உணவங்களில் பெரும்பாலும் எலுமிச்சை பானங்களுடன் எலுமிச்சை துண்டுகளும் பரிமாறப்படுகின்றன. எலுமிச்சையின் தோலில் ஆபத்தான நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

எனவே எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து சாப்பிடுவதுதான் நல்லது. தினமும் எலுமிச்சை சாறு பருகுவதில் தவறில்லை. எத்தனை பழங்கள் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். தினமும் இரண்டு எலுமிச்சை பழங்கள் பயன்படுத்தலாம். அதுபோல் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் உட்கொள்ளலாம்.

Tags:    

மேலும் செய்திகள்