உறவுக்கு கால இடைவெளி தேவை

மனதுக்கு பிடித்தமானவர்கள், நெருங்கிப் பழகும் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடையே சில சமயங்களில் மனஸ்தாபம் ஏற்படுவதுண்டு. தேவையற்ற வாக்குவாதங்களும் எழுவதுண்டு. ஒருமித்த கருத்தும், புரிதல் உணர்வும் இல்லாததே அதற்கு காரணமாக அமையும்.

Update: 2022-08-11 12:34 GMT

உறவுகளுக்குள் சிறிது காலம் இடைவெளியை கடைப்பிடிப்பதன் மூலம் இத்தகைய பிரச்சினைகளை தவிர்த்துவிடலாம். உறவில் புத்துணர்ச்சியை மீட்டெடுக்கவும் இந்த இடைவெளி உதவும். உறவுகளுக்குள் சிறிது காலம் பிரிவு தேவை என்பதை ஒருசில அறிகுறிகள் வெளிப்படுத்தும். அவை குறித்து பார்ப்போம்.

சலிப்பாக உணர்தல்:

புதிதாக ஒருவரிடம் பழகும்போது ஏற்படும் ஈர்ப்பு காலப்போக்கில் குறையத்தொடங்கும். சில சமயங்களில் சலிப்பை ஏற்படுத்தும். அவரவர் உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டிருக்கும். அப்படியே வெளிப்படுத்தினாலும் உணர்வுகளுக்கு உரிய மதிப்பை நம்மிடம் பழகுபவர் கொடுக்காமல் போகலாம். அந்த சமயங்களில் பிரிவோ, இடைவெளியோ அவசியம் தேவை. இல்லாவிட்டால் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபம் வெளிப்படும். அது நிரந்தரமான பிரிவுக்கு வித்திடும். அதனை தவிர்க்க சிறிது காலம் விலகி இருப்பது உறவுக்குள் மீண்டும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி கொடுக்கும்.

தவறான எண்ணங்கள்:

நெருங்கி பழகும் இருவருக்கும் இடையே தவறான புரிதல்கள் அதிகரித்திருந்தால், சிறிது காலம் உறவுக்கு ஓய்வு கொடுங்கள். ஏனெனில் தவறான புரிதல்கள் உறவு முறிந்து போவதற்கு காரணமாகிவிடும். பெரும்பாலும் தவறான கருத்துக்கள்தான் உறவுக்குள் மனக்கசப்பை ஏற்படுத்துகின்றன. அது நீண்ட காலம் நீடிக்கும்போது கிண்டல், வெறுப்பு வடிவத்தில் வெளிப்படும். தவறான புரிதல் இதுநாள் வரை பழகியவர் மீதான மதிப்பை குறைத்து மதிப்பிட வைத்துவிடும். உறவை சுமையாக கருதும் நிலையும் உண்டாகும். ஆதலால் தவறான புரிதல்கள், எண்ணங்கள் மனதுக்குள் தோன்றினால் சிறிது காலம் ஒதுங்கி இருங்கள். அந்த காலகட்டம் சம்பந்தப்பட்டவர்களை பற்றி சுய மதிப்பீடு செய்து கொள்ளும் வாய்ப்பை ஏற் படுத்தி கொடுக்கும். உறவை வலுப்படுத்திக்கொள்ளும் சூழலையும் உருவாக்கிக்கொடுக்கும்.

கேலி-கிண்டல்கள்:

சாதாரண விஷயங்களுக்கெல்லாம் உங்களுடன் சண்டையிட்டு, கேலி செய்தால் உங்கள் உறவில் விரிசல் தொடங்குகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் முன்னிலையில் கேலி, கிண்டல் செய்தாலும் உறவுக்குள் சுமுகமான சூழல் இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம். அப்படி செய்யும்போது கோபம் எட்டிப்பார்க்கும். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படக்கூடும். அதற்கு இடம் கொடுக்காமல் ஒதுங்கி இருப்பது நல்லது. இத்தகைய பிரச்சினைகளுக்கு என்ன காரணம் என்பதை கண்டு பிடிக்க முயலுங்கள். அதற்கு சுமூக தீர்வு கண்டுவிட்டு உறவை புதுப்பித்துக்கொள்ளலாம்.

நீளும் விவாதங்கள்:

முக்கியமான விஷயம் குறித்து விவாதிக்கும்போது வாக்குவாதம் தோன்றினால் ஒருவராவது அமைதி காக்க வேண்டும். மற்றவரின் பலவீனங்களை கேலி செய்யாதீர்கள். ஒருவர் மீது மற்றொருவர் பொய்யான குற்றச்சாட்டுக்களை வீசாதீர்கள். விவாதம் நீண்டுகொண்டே போனாலோ, எதிரில் இருப்பவர் தனது பேச்சை காதுகொடுத்து கேட்கவில்லை என்றாலோ ஒதுங்கி விடுங்கள். சில நாட்கள் அமைதி காப்பதே சால சிறந்தது.

நம்பிக்கை இழப்பு:

ஒருவருக்கொருவர் கொடுத்த வாக்குறுதிகளை பின்பற்ற முடியாமல் போனால் நம்பிக்கையை இழக்க நேரிடும். அது உறவில் விரிசலை ஏற்படுத்திவிடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதற்கு இடம் கொடுக்காதீர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்