விழுப்புரத்தில் வரி பாக்கி செலுத்தாத 5 கடைகளுக்கு `சீல்' நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Tax arrears

Update: 2022-11-15 18:45 GMT


விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் சுமார் 1½ லட்சம் பேர் வசித்து வருகின்றனர். சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி, நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களுக்கான வாடகை, திடக்கழிவு மேலாண்மை கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்டவைகள் மூலம் கிடைக்கக்கூடிய வருவாயை வைத்து நகர மக்களுக்கு தேவையான வளர்ச்சிப்பணிகள், அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சொத்து வரி ரூ.12 கோடியே 45 லட்சம், குடிநீர் இணைப்பு கட்டணம் ரூ.2 கோடியே 35 லட்சம், காலிமனை வரி ரூ.62 லட்சம், தொழில் வரி ரூ.1 கோடியே 11 லட்சம், திடக்கழிவு மேலாண்மை கட்டணமாக ரூ.1 கோடியே 47 லட்சம், பாதாள சாக்கடை கட்டணமாக ரூ.2 கோடியே 15 லட்சம் ஆக மொத்தம் ரூ.22 கோடியே 4 லட்சம் வரி மற்றும் வரியில்லா இனங்களில் வரி செலுத்தாமல் நிலுவை உள்ளது. இதனால் நகரில் சாலைப்பணிகள், குடிநீர் பணிகள் பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்பட்டதால் நிலுவையில் உள்ள வரிகளை தீவிரமாக வசூலிக்க நகராட்சி நிர்வாகம் தற்போது களமிறங்கியுள்ளது.

5 கடைகளுக்கு சீல் வைப்பு

நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை செலுத்தாவிட்டால் இணைப்புகள் துண்டிக்கப்படும், சீல் வைக்கப்படும் என்று ஏற்கனவே நோட்டீசு வழங்கப்பட்ட நிலையில் நகராட்சிக்கு வரி வருவாய் செலுத்த முன்வரவில்லை. இதனால் சீல் வைப்பு, இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாத 5 கடைகளை நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையிலான அதிகாரிகள் பூட்டி அந்த கடைகளுக்கு சீல் வைத்தனர்.

30-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும்

இதுகுறித்து அவர் கூறுகையில், வரி மற்றும் வரியில்லா இனங்கள் வைத்துள்ளவர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் நிலுவையின்றி செலுத்தி நகர வளர்ச்சி பணிகளை செயல்படுத்த நகராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இம்மாதம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பழைய நகராட்சி அலுவலக கட்டிடம், புதிய அலுவலக கட்டிடம் ஆகிய இடங்களில் செயல்படும் கணினி வசூல் மையத்தில் வரி பாக்கியை செலுத்தலாம். வரி செலுத்தாதவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளுக்கும் சீல் வைக்கப்படும். எனவே பொதுமக்கள் தானாக முன்வந்து தங்களது வரியை செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்