காங்கிரஸ் மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை சந்திப்பு... கூட்டணிக்கு அச்சாரமா?

தேர்தல் கூட்டணி கணக்கும் வெற்றிக்கான படிக்கல்லாக அரசியல் கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள்.;

Update:2025-12-06 03:19 IST

திருச்சி,

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளது. இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சிகளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி, தேர்தல் வெற்றிக்கு களம் அமைத்து வருகிறார்கள். மக்கள் மனதை கவர்ந்து வெற்றி பெறுவது ஒருபுறம் இருந்தாலும், தேர்தல் கூட்டணி கணக்கும் வெற்றிக்கான படிக்கல்லாக அரசியல் கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள்.

இந்த நிலையில் புதிதாக அரசியல் களத்துக்கு வந்துள்ள நடிகர் விஜய்யின் த.வெ.க. மீதான எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் கணிசமாக இருந்து வருகிறது. த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க ஒரு சில கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

இத்தகைய சூழலில் நடிகர் விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் திருவாரூரில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விமானம் மூலம் திருச்சி வந்தார். அதே திருமணத்துக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமியும் செல்ல இருந்தார்.

இதையடுத்து இருவரும் ஒரே காரில் திருச்சியில் இருந்து திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, மீண்டும் அதே காரில் திரும்பி வந்தனர். சுமார் 4 மணி நேரம் இருவரும் அரசியல் குறித்து பேசி உள்ளனர்.

இதுகுறித்து திருச்சி வேலுச்சாமியிடம் கேட்டபோது, ‘எஸ்.ஏ.சந்திரசேகர் எனது நண்பர். திருமண நிகழ்ச்சிக்கு இருவரும் ஒன்றாக சென்றோம். அவரிடம், தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தேன். அதை விரிவாக கூற முடியாது. கூட்டணி குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும்’ என்றார்.

இந்த சந்திப்பு மூலம் பரபரப்பான அரசியல் சூழலில் த.வெ.க. காங்கிரசுடன் கூட்டணி அமைக்க அச்சாரம் போட்டு வருகிறதோ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்