‘ஊழலில் இருந்து சுதந்திரம் பெறாத வரை நாம் அடிமைகள் தான்’ கமல்ஹாசன்

‘ஊழலில் இருந்து சுதந்திரம் பெறாத வரை நாம் அடிமைகளே, புதிய சுதந்திர போராட்டத்துக்கு வாருங்கள்’ என நடிகர் கமல்ஹாசன் கூறிஉள்ளார்.

Update: 2017-08-15 14:30 GMT


சென்னை, 


நடிகர் கமல்ஹாசன் அரசியல் விமர்சனங்களை தன்னுடைய டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு ஆளும் தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தது. எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து வரவேற்கப்பட்டது. கமல்ஹாசனின் கருத்துக்களுக்கு தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கும் பதிலுரைத்து வருகிறார்கள். தமிழக அரசை மறைமுகமாக விமர்சனம் செய்து வந்த கமல்ஹாசன் இப்போது நேரடியாக விமர்சனம் செய்து உள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், ஒரு மாநிலத்தில் துயர மற்றும் ஊழல் சம்பவங்கள் நிகழ்ந்தால் அம்மாநில முதல்-அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். தமிழக முதல்-அமைச்சரை எந்த கட்சிகளும் ராஜினாமா செய்ய வலியுறுத்தாதது ஏன்? தமிழகத்தில் ஏராளமான குற்றங்கள் நடந்து உள்ளது. என்னுடைய நோக்கமானது சிறந்த தமிழகமாகும். என்னுடைய குரலை வலுவாக்கும் தைரியம் யாருக்கு உள்ளது? திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எனக்கு கருவியாக உதவ வேண்டும். தற்போது உள்ள அரசியல் கட்சிகள் சரியில்லையெனில் மற்றொன்றை தேட வேண்டியவரும் என பதிவிட்டு உள்ளார்.  

மற்றொரு டுவிட் செய்தியில், ஊழலில் இருந்து சுதந்திரம் பெறாத வரை நாம் அடிமைகளே... புதிய சுதந்திர போராட்டத்துக்கு சூளுரைக்க துணிவு உள்ளவர்கள் வாருங்கள், வெல்வோம் என குறிப்பிட்டு உள்ளார். 

கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் பலியான சம்பவத்துக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் பலரும் குரல் கொடுத்துவரும் நிலையில் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியிருக்கிறார். முன்னதாக ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் உயிரிழப்புக்கு நடிகர் கமல் ஹாசன், மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழக்கூடாது என்று டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

மேலும் செய்திகள்