புறநகர் மின்சார ரெயில் சீசன் டிக்கெட் கட்டணம் உயர்வா? - ரெயில்வே விளக்கம்
ரெயில் கட்டணம் வரும் 26 ஆம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அறிவித்துள்ளது.;
சென்னை,
போக்குவரத்து சேவையில் புறநகர் மின்சார ரெயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. புறநகர் மின்சார ரெயில்களில் கட்டணம் மிகவும் குறைவு என்பதாலும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் விரைவாக பயணம் செய்யலாம் என்பதாலும் அதில் பயணிப்பதை பொதுமக்கள் விரும்புகிறார்கள். சென்னையில் கடற்கரை-செங்கல்பட்டு, சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. பொதுவாக மின்சார ரெயில்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் இந்த நேரத்தில் பயணிப்பதால், எப்போதும் இந்த நேரங்களில் ரெயில்களில் கூட்டம் இருக்கும்.
இந்த நிலையில், ரெயில் கட்டணம் வரும் 26 ஆம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சாதாரண வகுப்புகளில் 215 கி.மீக்கு மேல் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கிறது. 500 கிலோ மீட்டர் வரையிலான ரெயில்களில் ரூ.10 மட்டுமே கட்டணம் உயர்த்தப்படுகிறது. மெயில் மற்றும் விரைவு ரெயில்களில் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்படும் என ரெயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரெயில் கட்டண உயர்வு மூலம் ரூ.600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என ரெயில்வே தெரிவித்துள்ளது. இந்த கூடுதல் ரெயில் டிக்கெட் கட்டணமானது வருகிற டிசம்பர் 26ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
எனினும், புறநகர் மின்சார ரெயில் சேவைகளில் கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவும், சீசன் டிக்கெட்டுகளுக்கும் கட்டணம் உயர்வு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர சாதாரண வகுப்புகளில் 215 கி.மீ. வரை கட்டணம் உயர்வு இல்லை எனவும் ரெயில்வே தெரிவித்துள்ளது.