தூத்துக்குடி துப்பாக்கி சூடு வீடியோ வெளியிட்ட முகிலன் மாயமான வழக்கில் 148 பேரிடம் விசாரணை ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான வீடியோவை வெளியிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாயமான வழக்கில் இதுவரை 148 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக ஐகோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல் தெரிவித்தனர்.

Update: 2019-03-04 22:00 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், மனித உரிமைகள் ஆர்வலர் ஹென்றி டிபேன் என்பவர் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், ‘தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் கடந்த ஆண்டு மே 22-ந்தேதி போராட்டம் நடத்தினர். அப்போது கண்மூடித்தனமாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

இந்த கலவரத்திற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் குறித்த வீடியோ ஆதாரத்தின் தொகுப்பை சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் என்பவர் கடந்த மாதம் 15-ந்தேதி சென்னையில் வெளியிட்டார். அன்று இரவு சென்னையில் இருந்து மதுரைக்கு ரெயிலில் சென்றார். திண்டிவனம் சென்றபிறகு அவரை காணவில்லை. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே அவரை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல் குமார் ஆகியோர், மனுவுக்கு போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முகிலன் காணாமல் போன வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றிவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறினர்.

மனுதாரர் சார்பில் வக்கீல் சுதா ராமலிங்கம், ‘சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி என்பவர், மக்கள் கண்காணிப்பகம் என்ற அமைப்பை சேர்ந்த நிர்வாகியிடம் இரண்டரை மணி நேரம் விசாரித்துள்ளார். விசாரணை முழுவதும் ஹென்றி டிபேன் என்பவர் யார்?, அவருக்கு எத்தனை குழந்தைகள்?, எத்தனை குடும்பங்கள்?. இந்த வழக்கில் வக்கீல் சுதாராமலிங்கம் பணம் எதுவும் வாங்காமல், ஏன் இலவசமாக ஆஜராகி வாதாடுகிறார்? என்றெல்லாம் வழக்கிற்கு தொடர்பு இல்லாத கேள்விகளை கேட்டுள்ளார்’ என்றார்.

மேலும் அவர், “முகநூலில் முகிலன் காணாமல் போனது குறித்து சிலர் பதிவு வெளியிட்டுள்ளனர். அதில் முகிலன் எங்கே? என்று ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, ராஜபாளையம் போலீஸ் நிலையம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் நாராயணன் என்பவர், ‘சமாதி’ என்று பதிவிட்டுள்ளார்’ என்று வாதிட்டார். அதற்கு நீதிபதிகள், ‘போலீஸ் புலன் விசாரணையில் ஐகோர்ட்டு தலையிட முடியாது. இந்த ஆதாரங்களை, சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கவேண்டும்’ என்று கூறினர்.

போலீஸ் தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் அய்யப்பராஜ், ‘இந்த வழக்கு பிப்ரவரி 25-ந்தேதி சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. மறுநாள் முதல், போலீசார் விசாரணையை தொடங்கிவிட்டனர். முகிலனின் நண்பர்கள், உறவினர்கள் என்று இதுவரை 148 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

எனவே, புலன்விசாரணை நடைபெறுவதால், இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைக்கவேண்டும்’ என்றார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்